அனுமதியின்றி ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா பந்தயம் நடத்தினால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை


அனுமதியின்றி ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா பந்தயம் நடத்தினால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 20 Jan 2019 4:00 AM IST (Updated: 20 Jan 2019 2:27 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா பந்தயம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் டி.ஜி.வினய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திண்டுக்கல்,

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 15-ந் தேதி முதல் வருகிற மே மாதம் 31-ந்தேதி வரை ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ளது.

முன்னதாக ஜல்லிக்கட்டு நிகழ்வுகள் குறித்து அரசிதழ் அறிவிக்கை பெறப்பட்டு மாவட்ட கலெக்டரின் அனுமதி பெற வேண்டும். அதன் பின்னரே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில் முறையான அரசிதழ் அறிவிக்கை வெளியிடாமலும், மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெறாமலும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா பந்தயம், சேவல் சண்டை, கிடாமுட்டு உள்ளிட்டவைகளை நடத்த சிலர் திட்டமிட்டுள்ளதாக மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

இதையடுத்து உரிய அனுமதியின்றி மாவட்டம் முழுவதும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா பந்தயம் ஆகியவற்றை நடத்தக்கூடாது என கலெக்டர் டி.ஜி.வினய் அறிவித்துள்ளார். மேலும் தடையை மீறி யாரேனும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் ரேக்ளா பந்தயம் நடத்துவது தெரியவந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசார் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் மாவட்டம் முழுவதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரோந்து சென்று அனுமதியின்றி யாரேனும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நடத்துகிறார்களா? என ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story