ஐகோர்ட்டு உத்தரவுப்படி நீர்நிலைகள் மீட்பு குழுவினர் தேனி கண்மாய்களில் ஆய்வு


ஐகோர்ட்டு உத்தரவுப்படி நீர்நிலைகள் மீட்பு குழுவினர் தேனி கண்மாய்களில் ஆய்வு
x
தினத்தந்தி 20 Jan 2019 4:00 AM IST (Updated: 20 Jan 2019 3:16 AM IST)
t-max-icont-min-icon

ஐகோர்ட்டு உத்தரவுப்படி அமைக்கப்பட்ட நீர்நிலைகள் மீட்பு குழுவினர் தேனியில் உள்ள கண்மாய்களில் நேற்று ஆய்வு செய்தனர்.

தேனி,

மதுரை மேலூரை சேர்ந்த வக்கீல் அருண்நிதி, மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார். அதில், ‘மதுரை வண்டியூர் கண்மாய் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் மற்றும் நீர்வழிப்பாதைகளை பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால், தண்ணீர் முறையாக செல்வது இல்லை. நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டது. இதேநிலை நீடித்தால் மாவட்டமே பாலைவனமாக மாறிவிடும். எனவே நீர்நிலைகள் மற்றும் நீர்வழிப்பாதைகளில் உள்ள தற்காலிக, நிரந்தர கட்டிடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும், என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட கலெக்டர்கள் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டனர். 5 மாவட்ட கலெக்டர்களும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி 5 மாவட்ட கலெக்டர்களும் ஆஜராகினர். இதையடுத்து, அந்தந்த மாவட்டங்களில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர்களுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மேலும், நீர்நிலைகளில் உள்ள இடங்களுக்கு பட்டா வழங்கக்கூடாது என சார்பதிவாளர்களுக்கு அறிவுறுத்தி சுற்றறிக்கை அனுப்ப பதிவுத்துறை தலைவருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த வழக்கை நீதிபதிகள் டி.ராஜா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் காணொலி காட்சி மூலம் சென்னை ஐகோர்ட்டில் இருந்து விசாரித்தனர்.

விசாரணை முடிவில், “மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றியதை ஆய்வு செய்ய நீர்நிலைகள் மீட்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் முல்லைப்பெரியாறு, வைகை பாசனத்துக்கு உட்பட்ட கண்மாய்கள், குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் முறையாக அகற்றப்பட்டுள்ளனவா என்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் கோர்ட்டுக்கு உதவியாக மூத்த வக்கீல் வீராகதிரவன் இருந்து மீட்பு குழுவினருடன் சென்று ஆய்வில் பங்கேற்க வேண்டும். இந்த குழுவுக்கு தேவையான உதவிகளை மாவட்ட கலெக்டர்கள் செய்து தர வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஐகோர்ட்டு உத்தரவுப்படி அமைக்கப்பட்ட நீர்நிலைகள் மீட்பு குழுவினர் தேனியில் உள்ள கண்மாய்களில் நேற்று ஆய்வு செய்தனர். மூத்த வக்கீல் வீராகதிரவன் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவினர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர். தேனி மீறுசமுத்திரம் கண்மாய், கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள தாமரைக்குளம் கண்மாய், மந்தைக்குளம் என்ற சின்னக்குளம் கண்மாய், ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சிகுஓடை கண்மாய், போடி விலக்கில் உள்ள கன்னிமார் குளம், ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது வருவாய்த்துறை, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உடன் இருந்தனர். அவர்களிடம் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதா? என்றும், ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், கண்மாய்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்பது போன்ற கேள்விகளை எழுப்பி விளக்கம் கேட்டனர். இந்த குழுவினர் 10 நாட்களுக்கு பிறகு மீண்டும் தேனி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவித்தனர்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, தேனி தாசில்தார் சத்தியபாமா, தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ராஜாராம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story