மும்பையில் தேசிய சினிமா அருங்காட்சியகம் பிரதமர் மோடி திறந்து வைத்தார்


மும்பையில் தேசிய சினிமா அருங்காட்சியகம் பிரதமர் மோடி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 20 Jan 2019 5:30 AM IST (Updated: 20 Jan 2019 5:18 AM IST)
t-max-icont-min-icon

இந்திய சினிமா 100 ஆண்டுகளை கடந்து சாதனை படைத்து இருக்கிறது. இந்திய சினிமாவின் நூற்றாண்டு பயணத்தை குறிக்கும் வகையில் மும்பையில் பிரமாண்ட தேசிய சினிமா அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு உள்ளது.

மும்பை,

19-ம் நூற்றாண்டின் பாரம்பரிய மாளிகையான குல்சன் மஹால் வளாகத்தில் இந்த சினிமா அருங்காட்சியகம் ரூ.140 கோடியே 61 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த சினிமா அருங்காட்சியகத்தை நேற்று பிரதமர் மோடி திறந்து வைத்தார். அவர் அருங்காட்சியகத்தை சுற்றி பார்த்து ரசித்தார். விழாவில் ஏராளமான சினிமா நட்சத்திரங்கள், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:- இந்த அருங்காட்சியகத்தில், இரண்டாம் உலகப் போரின் 30 மணி நேர டிஜிட்டல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் இந்த போரில் இறந்த 1.5 லட்சம் இந்திய வீரர்கள் உலகிற்கு அறியப்படுவார்கள்.

திரைப்படங்களும், சமூகமும் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கிறது. திரைப்படங்களில் நீங்கள் என்ன பார்க்கிறீர்களோ அது சமுதாயத்தில் நடக்கிறது, சமுதாயத்தில் என்ன நடக்கிறதோ அதை தான் திரைப்படங்கள் காட்டுகின்றன.

நாம் முன்பு திரைப்படங்களில் இந்தியாவின் ஏழ்மை நிலையையும், உதவியின்மையையும் பார்த்திருப்போம். ஆனால் தற்போது திரைப்படங்களில் பிரச்சினைகளை காண்பித்தால், தீர்வும் அதிலேயே கூறப்படுகிறது.

சினிமாவை போல இந்தியாவும் மாறுகிறது. இந்தியா பிரச்சினைகளுக்கு தீர்வை தேடுகிறது. இங்கு மில்லியன் பிரச்சினைகள் உள்ளன. ஆனால் அதற்கு பில்லியன் தீர்வுகளும் இருக்கிறது.

முன்பு திரைப்படங்களை எடுத்து முடிக்க 10 முதல் 15 ஆண்டுகள் வரை கூட ஆனது. ஆனால் தற்போது ஒரு காலவரையறைக்குள் சில மாதங்களில் படங்கள் எடுத்து முடிக்கப்படுகின்றன. இதேபோன்று அரசாங்க திட்டங்களும் காலக்கெடுவில் முடிக்கப்படுகிறது.

தற்போது நமது சினிமா துறை நமது நாட்டை கடந்தும் புகழ்பெற்று விளங்கு கிறது. சில உலக தலைவர்களை சந்திக்கும்போது அவர்களுக்கு நம் மொழி தெரியவில்லை என்றாலும் நம் திரைப்பட பாடல் வரிகள் முழுவதையும் பாடி காட்டுகின்றனர்.

சுற்றுலா வளர்ச்சியில் சினிமா துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இது ஏழை மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது. சுற்றுலாத்துறை வளர்ச்சி அடையும் போது டீ விற்பவர் கூட பணம் சம்பாதிக்கிறார்.

திருட்டுத்தனமாக திரைப்படங்கள் வெளியாவதால், சினிமாத்துறையினரின் கடும் உழைப்புக்கு ஊறுவிளைவிக்கப்படுகிறது. இதை நான் நன்கு அறிவேன். இவ்வாறு திருட்டுத்தனமாக திரைப்படங்கள் வெளியாவதை தடுக்க மத்திய அரசு உறுதிப்பூண்டு உள்ளது.

மேலும் படப்பிடிப்பு மற்றும் வெளியீடு தொடர்பான அனுமதி பெறுவதை எளிமையாக்கும் வகையில் ஒற்றை சாளர முறை உருவாக்கப்படும்.

டாவோசில் உலக பொருளாதார மன்ற உச்சி மாநாடு நடைபெறுவதை போல, இந்தியாவில் ஒரு சர்வதேச திரைப்பட உச்சி மாநாடு நடத்தலாம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Next Story