மாவட்ட செய்திகள்

உஷாரய்யா உஷாரு + "||" + Usharaya Usha

உஷாரய்யா உஷாரு

உஷாரய்யா உஷாரு
அவள், நவீன கலைத் தொழில்நுட்பங்களை கற்றுக்கொடுக்கும் பிரபல கல்லூரி ஒன்றின் மாணவி. அழகான தோற்றம் கொண்டவள். ஸ்டைலாக வலம் வருபவள்.
அவள், நவீன கலைத் தொழில்நுட்பங்களை கற்றுக்கொடுக்கும் பிரபல கல்லூரி ஒன்றின் மாணவி. அழகான தோற்றம் கொண்டவள். ஸ்டைலாக வலம் வருபவள். கல்லூரியில் சேர்ந்த முதல் நாளிலே அவளது வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களின் கவனத்தையும் ஈர்த்து விட்டாள். பொது அறிவுத் தகவல்களை நிறைய தெரிந்து வைத்துக்கொண்டு, எந்த விஷயமாக இருந்தாலும், அதில் புத்திசாலித்தனமாக கருத்து சொல்லும் ரகமாகவும் இருந்தாள். அவள் தமிழகத்தின் அண்டை மாநிலம் ஒன்றை சேர்ந்தவள். ஆங்கில மொழிப்புலமையும் அவளிடமிருந்தது.

அவள் எல்லோரையும் கவர்ந்ததால், அவளை பற்றியும் அவளது குடும்ப பின்னணி பற்றியும் தெரிந்துகொள்ள உடன் படிக்கும் மாணவ-மாணவிகள் ஆர்வம் கொண்டனர். தனது தந்தை ராணுவ அதிகாரியாக பணியாற்றுவதாக சொன்னாள். தந்தை ராணுவ அதிகாரி தோற்றத்தில் இருக்கும் போட்டோவையும் காட்டினாள். தனது தாயார் அந்த மாநிலத்தில் அரசுத்துறை ஒன்றில் அதிகாரியாக இருப்பதாகவும் கூறினாள். அதற்கு ஏற்ப பொருளாதாரத்தில் வலுவாக இருப்பதாக காட்டிக்கொள்ளும் விதத்தில் கல்லூரியில் சேர்ந்த புதிதில் தன்னுடன் பயிலும் மாணவ-மாணவிகளுக்காக பணமும் செலவு செய்தாள்.

பணம், அந்தஸ்து, அறிவு போன்ற அனைத்திலும் தன்னை அவள் உயர்ந்தவளாக காட்டிக்கொண்டதால், மாணவர்கள் சிலர் அவளிடம் போட்டிபோட்டு பழக முன் வந்தார்கள். அவளோ தனது வகுப்பில் உள்ள மாணவர்களை ஓரங் கட்டிவிட்டு, பக்கத்து வகுப்புகளில் உள்ள வசதியுள்ள மாணவர்களிடம் மட்டும் நெருக்கமாகப் பழகினாள். ஒருவருக்கு தெரியாமல் அடுத்தவரிடம் நட்புவைத்துக்கொண்டாள். தனித்தனியாக ஒவ்வொருவருடனும் வெளியேயும் சென்று வந்தாள். அவளோடு நட்பு கிடைத்தது மிகப்பெரிய விஷயம் என்று வசதி படைத்த மாணவர்கள் சிலர் கருதியதை அவள் சுயலாபத்திற்காக பயன்படுத்திக்கொண்டாள்.

அவள் கல்வித் தொடர்பாக ஆண்டுக்கு ஒருமுறை இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டியதிருந்தது. கல்லூரி காலத்தில் இரண்டுமுறை வெளிநாட்டு பயணங்களும் மேற்கொள்ள வேண்டும். அந்த பயணங்களுக்காக அவள் முதல் ஆளாக பணம் கொடுத்து தனது பெயரை பதிவு செய்துகொண்டாள். பயணங்கள் நல்லபடியாக முடிந்தன. வெற்றிகரமாக கல்லூரி படிப்பை நிறைவு செய்யும் தருணம் நெருங்கியது.

அவள் வசதிபடைத்த மூன்று மாணவர்களிடம் ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவரோடு, தான் அவர்களை காதலிப்பது போல் நடித்திருக்கிறாள். தான் உள்நாடு மற்றும் வெளிநாட்டில் கல்விச் சுற்றுலா செல்லக்கூடிய சூழல் வரும் போதெல்லாம் ஒருவருக்குத் தெரியாமல் இன்னொருவரிடம், நம்பும்படியான ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி கடனாக பெருமளவு பணம் கேட்டிருக்கிறாள். அவர்களும் காதலுக்கு மரியாதை செய்வதாக கருதிக்கொண்டு எப்படியோ பணத்தை புரட்டி கொடுத்திருக்கிறார்கள்.

கல்லூரிகாலம் முடியும் தருவாயில்தான் அவர்களுக்கு, ‘அவள் மூன்று பேரோடு பழகுவதும், ஒவ்வொருவரிடமும் பல ஆயிரங்களை கடனாக பணம் பெற்றிருப்பதும் தெரிய வந்திருக்கிறது’. மூன்று மாணவர்களும் சேர்ந்து கொண்டார்கள்.

அன்று அவளை சூழ்ந்துகொண்ட அவர்கள், ‘எங்களை ஏமாற்ற உனக்கு எப்படி மனம் வந்தது? உன் அப்பா ராணுவ அதிகாரி என்றும், உன் அம்மா அரசு அதிகாரி என்றும் ஏன் பொய் சொன்னாய்? பணத்திற்காகத்தானே எங்களை காதலிப்பது போன்று நடித்தாய்?’ என்று கேட்கவும், அவள் கண்கள் கலங்கினாள்.

‘என் குடும்பத்தைப் பற்றி நான் உங்களிடம் சொன்னதெல்லாம் பொய்தான். என் அப்பா, எங்கள் மாநிலத்தில் ஒரு அமெச்சூர் நாடக நடிகர். அவர் ராணுவ வீரர் வேடத்தில் தோன்றிய படத்தைக் காட்டிதான் உங்களை நம்பவைத்தேன். என் அம்மா ஊரில் முந்திரி பருப்பு தொழிற்சாலையில் சாதாரண வேலை செய்துகொண்டிருக்கிறார். எப்படியோ கஷ்டப்பட்டு எனக்கு இந்த கல்லூரியில் இடம் கிடைத்துவிட்டது. ஆனால் இந்த கல்விக்கான செலவை என்னால் ஈடுசெய்ய முடியவில்லை. படிப்பை இடையில் நிறுத்தவும் மனம் இடம் தரவில்லை. அதனால்தான் வசதி படைத்த உங்கள் மூன்று பேரையும் வெவ்வேறு வகுப்புகளில் இருந்து தேர்ந்தெடுத்து, உங்களை காதலிப்பதுபோல் நடித்து நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டேன். நீங்கள் நம்பும்படியாக திடீர் காரணங்களை கூறி உங்களிடம் இருந்து பணத்தை கடனாக பெற்றேன். எப்படியோ உங்கள் உதவியால் என் படிப்பு முடிந்துவிட்டது. நான் சீக்கிரத்தில் வேலைக்கு சேர்ந்து உங்கள் கடனை அடைத்துவிடுவேன்’ என்று கூறி, ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக மன்னிப்பு கேட்டுவிட்டு, கிளம்பி போய்விட்டாள்.

இந்த சம்பவம் நடந்து பல வருடங்களாகிவிட்டன. அந்த மூன்று பேரும் இப்போதும் நண்பர்களாக இருக்கிறார்கள். அவர்கள் நாற்பது வயதை கடந்துவிட்டார்கள். திருமணமாகி, குழந்தைகளும் இருக்கின்றன.

‘அந்த மாணவி அப்புறம் என்னங்க ஆனங்க?’ என்று அவர்களிடம் கேட்டபோது, “அவள், சொந்த மாநிலத்துக்கு சென்ற முதல் மூன்று மாதங்கள் மட்டும் தகவல் தொடர்பில் இருந்தாள். பின்பு எந்த தொடர்பும் இல்லை. அவள் கொடுத்த விலாசமும் சரிஇல்லை. எங்களுடன் தொடர்பை ஏற்படுத்தவும் அவள் முயற்சிக்கவில்லை. இப்போது எங்கிருக்கிறாள்? எப்படி இருக்கிறாள்? என்றே தெரியாது. எங்களை அவள் மறந்தது போல் நாங்களும் அவளை மறந்துவிட்டோம்” என்கிறார்கள்.

20 வருடங்களுக்கு முன்பே ஒரு மாணவி, வசதி படைத்த மாணவர்களை எப்படி திட்டம் போட்டு கவிழ்த்திருக்கிறாள்.. பார்த்தீர்களா?!

- உஷாரு வரும்..