பெண்களுக்கு திருமண நிதி உதவி அமைச்சர் மணிகண்டன் வழங்கினார்
ராமநாதபுரத்தில் 400 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவி தொகையை அமைச்சர் மணிகண்டன் வழங்கினார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை சார்பில் படித்த ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி, அரசு மானியத்துடன் கூடிய அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கும் விழா ஆகியவை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தலைமை தாங்கினார்.
இதில் அமைச்சர் மணிகண்டன் கலந்து கொண்டு 400 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவிகளையும், 105 பெண்களுக்கு இருசக்கர வாகனங்களையும் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:– முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பெண் கல்வியை ஊக்குவித்திடும் வகையிலும், பெண்களின் நலனை கருத்தில் கொண்டு சரியான வயதில் திருமணம் செய்தலை உறுதிப்படுத்திடும் நோக்கிலும் படித்த ஏழை பெண்களின் திருமணத்திற்கு நிதிஉதவி மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார்.
இத்திட்டத்தின் கீழ் ராமாநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2011–ம் ஆண்டு முதல் தற்போது வரை 27 ஆயிரத்து 602 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் ரூ.115 கோடி மதிப்பிலான திருமண நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல தற்போது தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் உழைக்கும் மகளிருக்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் அரசு மானியத்துடன் 105 பயனாளிகளுக்கு ரூ.26 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான அம்மா இரு சக்கர வாகனங்களும், சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு விலையில்லா தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 7 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் எந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கோடை காலத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்ய ஏதுவாக 50 இடங்களில் புதிதாக குடிநீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. தகவல் தொழில்நுட்பத்துறையின் மூலம் தமிழகத்தில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியை தேர்வு செய்து நகராட்சி மற்றும் ஊரகப்பகுதிகளில் குடிநீர் வினியோகம், தெரு விளக்கு செயல்பாடு, சாலை வசதி போன்றவற்றை கண்காணிப்பதற்கு முன்னோட்டமாக புதிய செயலி தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஹெட்சி லீமா அமலினி, மாவட்ட சமூக நல அலுவலர் குணசேகரி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கேசவதாசன், உதவி மகளிர் திட்ட அலுவலர் ராஜா முகமது உள்பட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.