பாம்பன் ரோடு பாலத்தில் மீண்டும் போக்குவரத்து நெருக்கடி


பாம்பன் ரோடு பாலத்தில் மீண்டும் போக்குவரத்து நெருக்கடி
x
தினத்தந்தி 21 Jan 2019 4:15 AM IST (Updated: 20 Jan 2019 8:01 PM IST)
t-max-icont-min-icon

சுற்றுலா வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பாம்பன் ரோடு பாலத்தில் மீண்டும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ராமேசுவரம்,

ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரோடு

பாலம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. அதுபோல் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் தினமும் கார்,வேன் மற்றும் சுற்றுலா பஸ்கள் மூலமாகவும் ராமேசுவரம் வரும் சுற்றுலா பயணிகள் கடலுக்குள் அமைந்துள்ள ரோடு மற்றும் ரெயில் பாலத்தை பார்க்கும் ஒரு ஆர்வத்தில் தாங்கள் வந்த வாகனங்களை ரோடு பாலத்தில் வரிசையாக நிறுத்தி விடுவதால் பாலத்தில் அவ்வப்போது கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வந்தது.

இதேபோல் பாம்பன் ரோடு பாலத்தில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல் இருக்கவும் ரோடு பாலத்தில் சுற்றுலா வாகனங்களை நிறுத்தினால் 600 அபராதம் எனவும், சுற்றுலா பயணிகளை பாலத்தில் இறக்கி விட்டு வாகனங்களை வாகன ஓட்டிகள் எடுத்துச்சென்று விட வேண்டும் எனவும், மாவட்ட கலெக்டரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பாலத்தில் சுற்றுலா வாகனங்களை நிறுத்தாமல் இருக்கும் வகையில் 10–க்கும் மேற்பட்ட போலீசார் ரோடு பாலத்தில் கடந்த 2 வாரத்திற்கு மேலாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இதனால் ரோடு பாலத்தில் எந்தவொரு வாகனங்களும் நிறத்தப்படாமல் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் பாம்பன் ரோடு பாலத்தில் போலீசார் ஒருவர் கூட நேற்று பாலத்தில் பாதுகாப்பில் இல்லாததால் வழக்கம் போல் ரோடு பாலத்தின் பல இடங்களிலும் சுற்றுலா வகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன.குறிப்பாக பாலத்தின் மைய பகுதியில் ஏராளமான வாகனங்களை வரிசையாக நிறுத்தி வைத்திருந்தனர்.

இதனால் நேற்று பகல் நேரத்தில் மீண்டும் போக்குவரத்து நெருக்கடி தொடங்கி விட்டது.ரோடு பாலத்தின் மைய பகுதியில் ஒரே நேரத்தில் அதிகமான வாகனங்கள் நிறுத்தப்படும் பட்சத்தில் அதன் உறுதித்தன்மை குறைவதோடு பாலத்தின் ஸ்பிரிங் இணைப்புகளில் ஏதேனும் பழுது ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எனவே ரோடுபாலத்தின் பாதுகாப்பு கருதியும்,போக்குவரத்து நெருக்கடி ஏற்படமல் இருக்கும் வகையில் மீண்டும் கூடுதலாக போலீசாரை ரோடு பாலத்தில் பாதுகாப்பில் ஈடுபடுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story