நெல்லிக்குப்பம் அருகே பரபரப்பு பஸ் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு பயணிகள் அலறி அடித்து ஓட்டம்
நெல்லிக்குப்பம் அருகே பஸ் மீது கல்வீசி கண்ணாடியை மர்ம மனிதர்கள் உடைத்தனர். இதனால் பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நெல்லிக்குப்பம்,
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில் இருந்து கடலூர் நோக்கி நேற்று தனியார் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. இதை சங்கராபுரத்தை சேர்ந்த பாலாஜி(வயது 40) என்பவர் ஓட்டி வந்தார். அப்போது நெல்லிக்குப்பம் அடுத்த காராமணி குப்பத்தில் பஸ் வந்து கொண்டிருந்தது.
அப்போது, சாலையோரம் நின்று கொண்டிருந்த 3 பேர் திடீரென கற்களை எடுத்து பஸ்சின் மீது வீசினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. தொடர்ந்து பாலாஜி பஸ்சை நிறுத்தினார். மேலும் பஸ்சின் உள்ளேயும் கற்களை அவர்கள் வீசியதால், பயணிகள் அனைவரும் லறிஅடித்துக்கொண்டு பயணிகள் அனைவரும் பஸ்சில் இருந்து இறங்கி ஓட தொடங்கினர்.
இதற்கிடையே அந்த பஸ்சில் பயணம் செய்த போலீஸ்காரர் ஒருவர், பஸ்சில் இருந்து இறங்கி, ஓடி சென்று கல்வீசிய 3 பேரையும் மடக்கி பிடித்தார். அப்போது அவர்கள் போலீஸ்காரரிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். இதை தொடர்ந்து அங்கிருந்த பயணிகள் போலீஸ்காரருக்கு ஆதரவாக ஒன்றுதிரண்டனர்.
இதுபற்றி நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அதற்குள், அந்த பகுதியை சேர்ந்த சிலர் ஒன்று திரண்டு கல்வீசிய 3 பேருக்கு ஆதரவாக பேசி அவர்களை அங்கிருந்து தப்பி செல்ல வைத்து விட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் கடலூர்–நெல்லிக்குப்பம் சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன், அங்கு சிறிது நேரம்பரபரப்பு நிலவியது.