தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை 5 பேரின் உடல்களும் ஒரே குழியில் அடக்கம்


தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை 5 பேரின் உடல்களும் ஒரே குழியில் அடக்கம்
x
தினத்தந்தி 21 Jan 2019 5:15 AM IST (Updated: 21 Jan 2019 12:24 AM IST)
t-max-icont-min-icon

தாய், மனைவி மற்றும் குழந்தைகளை கொன்றுவிட்டு ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டார். இறந்து போன 5 பேரின் உடல்களும் ஒரே குழியில் அடக்கம் செய்யப்பட்டது.

கருமத்தம்பட்டி,

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அமலி நகரை சேர்ந்தவர் அந்தோணி ஆரோக்கியதாஸ் (வயது 38), அரசு பள்ளி ஆசிரியர். இவர், தன் மனைவி ஷோபனா (30), மகன் ரித்திக் மைக்கேல் (7), மகள் ரியா ஏஞ்சலின் (1) மற்றும் தாய் புவனேஷ்வரி (65) ஆகியோருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

அவருக்கு கடந்த 12 ஆண்டுகளாக முதுகுவலி இருந்ததால், அதற்கு பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அந்தோணி ஆரோக்கியதாஸ், தனது மனைவி மற்றும் குழந்தைகள், தாயார் ஆகியோருக்கு வி‌ஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கருமத்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, 5 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் அந்தோணி ஆரோக்கியதாஸ் எழுதி இருந்த உருக்கமான கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதுகுவலிக்கு சிகிச்சை பெற்ற அவர், திருப்பூரில் உள்ள ஒரு டாக்டரிடம் மனஅழுத்தத்துக்காகவும் சிகிச்சை பெற்றது தெரியவந்துள்ளது.

அதுபோன்று அந்தோணி ஆரோக்கியதாசின் தாயார் மற்றும் மனைவி, குழந்தைகள் இஞ்சி டீ குடித்ததற்கான அடையாளங்கள் வீட்டில் இருந்தன. எனவே அதில் வி‌ஷம் கலந்து அவர்களுக்கு கொடுத்துவிட்டு, அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள். இதுதவிர வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட ஆசிரியர் மற்றும் கொலை செய்யப்பட்ட அவருடைய தாய், மனைவி மற்றும் குழந்தைகள் ஆகிய 5 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்த பின்னர் நேற்று மாலையில் கருமத்தம்பட்டி கொண்டு வரப்பட்டது.

பின்னர் அவர்கள் 5 பேரின் உடல்களும் அங்குள்ள கல்லறை தோட்டத்தில் ஒரே குழியில் வைத்து அடக்கம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story