தொண்டாமுத்தூரில் ரூ.6 கோடி செலவில் புதிய துணை மின்நிலையம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்


தொண்டாமுத்தூரில் ரூ.6 கோடி செலவில் புதிய துணை மின்நிலையம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 21 Jan 2019 4:15 AM IST (Updated: 21 Jan 2019 12:25 AM IST)
t-max-icont-min-icon

கோவையை அடுத்த தொண்டாமுத்தூரில் ரூ.6 கோடி செலவில் அமைக்கப்பட்ட புதிய துணை மின்நிலையத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.

கோவை,

கோவையை அடுத்த தொண்டாமுத்தூரில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் புதிய துணை மின்நிலைய திறப்பு விழா மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு ரூ.6 கோடி செலவில் அமைக்கப்பட்ட புதிய துணை மின்நிலையத்தினை தொடங்கி வைத்து பார்வையிட்டார். அதன்பின்னர் அவர் பேசியதாவது:–

மின்பாதையில் ஏற்படுகின்ற மின் இழப்பையும், மின்பராமரிப்பு செலவினங்களையும் குறைத்து, ஒவ்வொரு பகுதிக்கும் தேவைப்படுகிற உச்சகட்ட மின் தேவையை நிறைவு செய்யும் வகையில் சரியான மின் அழுத்தத்துடன், மக்களுக்கு சீரான தடையில்லா உயர்திறன் மின்சாரம் வழங்கிட கூடுதல் துணை மின் நிலையங்கள் அமைப்பது அவசியமாகும். இதை கருத்தில் கொண்டு, தேவைக்கேற்ப புதிய மற்றும் தரம் உயர்த்தப்பட்ட துணை மின்நிலையங்களை தமிழக அரசு அமைத்து வருகிறது. மாதம்பட்டி மற்றும் தேவராயபுரம் துணை மின் நிலையங்களில் மின் அதிகரித்து வருவதாலும், தொண்டாமுத்தூர் பகுதியில் மின் தேவை அதிகரித்து வருவதாலும் மின் இழப்பு மற்றும் மின் அழுத்தம் குறைபாடுகளை சீர் செய்யும் நோக்கில், தொண்டாமுத்தூரில் ரூ. 6 கோடி செலவில் புதிய துணை மின்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

கோவை மின்பகிர்மான வடக்கு வட்டத்திற்குட்பட்ட தொண்டாமுத்தூர் மற்றும் தாளியூர் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 24,500 மக்கள் வசித்து வருகின்றனர் 13,000 மின் இணைப்புகள் அளிக்கப்பட்டு மின் நுகர்வோர்கள் பயணடைந்து வருகின்றனர். தொண்டாமுத்தூர் மற்றும் தாளியூர் நகரப்பஞ்சாயத்திற்குட்பட்ட கெம்பனூர், முத்திபாளையம், குளத்துப்பாளையம், தீனம்பாளையம், புதுப்பாளையம் கலிக்கநாயக்கன்பாளையம், பூச்சியூர் மற்றும் சுண்டபாளையம் போன்ற கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு இதன் மூலம் சீரான மின் அழுத்தத்தில் மின்சாரம் வழங்கிட இயலும். மேலும், இந்த பகுதியில் புதிய துணை மின்நிலையம் அமைப்பதால் ஆண்டுக்கு 31.56 லட்சம் யூனிட்டுகள் மின் இழப்பை குறைப்பதால், தமிழ்நாடு மின் வாரியத்திற்கு தோராயமாக ஒரு ஆண்டுக்கு ரூ.1.95 கோடி வரை மிச்சமாகும்.

இந்த விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ரூபன் சங்கர் ராஜ், தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை பொறியாளர் மணி, உதவி இயக்குனர்கள் (பேரூராட்சிகள்) (பொ) மனோரஞ்சிதம், (ஊராட்சிகள்) பத்மாவதி, தாசில்தார் ராதாகிருஷ்ணன், செயற்பொறியாளர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story