கும்மிடிப்பூண்டி அருகே 3 பேர் கொலை: கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படை 18 பேரிடம் விசாரணை


கும்மிடிப்பூண்டி அருகே 3 பேர் கொலை: கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படை 18 பேரிடம் விசாரணை
x
தினத்தந்தி 21 Jan 2019 4:15 AM IST (Updated: 21 Jan 2019 12:35 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே 3 பேர் கொலை வழக்கில் கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 18 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் அருகே உள்ள ம.பொ.சி நகரை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 17). பாலிடெக்னிக் கல்லூரி மாணவர். இவருடைய நண்பர்கள் கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியை சேர்ந்த விமல் (23), சென்னை திருவொற்றியூரை சேர்ந்த சதீஷ் (24). இவர்கள் 3 பேரும் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு பேசி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 8 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் ஆகாஷ் உள்பட 3 பேரையும் வெட்டி கொன்று விட்டு தப்பிச்சென்று விட்டனர். இதை பார்த்த அந்த பகுதி மக்கள் பீதி அடைந்தனர்.

இது குறித்து டி.ஐ.ஜி. தேன்மொழி, திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனா தத் ஆகியோர் அங்கு முகாமிட்டு ஆய்வு நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

துப்பு துலக்க சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா ஒன்றில் பதிவான காட்சிகளை கொண்டு கொலையாளிகள் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

படுகொலை செய்யப்பட்ட 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு பின்னர் நேற்று மாலை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கொலை சம்பவத்தையொட்டி கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் நிலையத்திற்கு பாதுகாப்பு பணிக்காக 120 போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம், கொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் கிடந்த இடங்கள் மற்றும் கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலை ஆகிய பகுதிகளில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.

கொலை செய்யப்பட்டவர்களின் செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார் அதை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 8-ந் தேதி கும்மிடிப்பூண்டி ம.பொ.சி. நகரை சேர்ந்த ஷாஜகான் (28) என்பவரை முன்விரோதம் காரணமாக கத்தியால் குத்தி 5 பேர் கொண்ட கும்பல் கொலை செய்து உடலை ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் புதைத்தனர். தற்போது கொலை செய்யப்பட்டிருக்கும் விமல் மற்றும் சதீஷ் ஆகியோரும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த கொலைக்கு பழி வாங்கும் நடவடிக்கையாக இந்த படுகொலைகள் நடந்ததா? என்ற சந்தேகமும் போலீசாருக்கு ஏற்பட்டு உள்ளது. அரிவாள் வெட்டுகளை பார்க்கும்போது இதன் பின்னணியில் கூலிப்படையினர் இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இந்த சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முன்விரோதம் காரணமாக இந்த கொலைகள் நடந்ததா? கஞ்சா பிரச்சினையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் 6 தனிப்படைகள் அமைத்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் கஞ்சா வியாபாரிகள், பழைய குற்றவாளிகள் என 5 பெண்கள் உள்பட 18 பேரிடம் சந்தேகத்தின் பேரில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக துப்பு துலக்கிட அமைக்கப்பட்ட தனிப்படையினர் ஆந்திர மாநிலம் தடா, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சந்தேகத்திற்கு இடமான பகுதிகளில் கண்காணிப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story