குரும்பூரில் டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


குரும்பூரில் டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Jan 2019 4:00 AM IST (Updated: 21 Jan 2019 1:22 AM IST)
t-max-icont-min-icon

குரும்பூரில் டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தென்திருப்பேரை,

குரும்பூர் மெயின் ரோட்டில் செயல்பட்ட டாஸ்மாக் கடை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. இதையடுத்து குரும்பூர் கீழ பஸ் நிறுத்தம் அருகில் நாலுமாவடி செல்லும் சாலையில் வாடகை கட்டிடத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு லாரியில் மதுபாட்டில்கள் கொண்டு வரப்பட்டு, அந்த டாஸ்மாக் கடையில் இறக்கி வைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் அந்த டாஸ்மாக் கடையை கடந்த 17-ந் தேதி முற்றுகையிட்டனர். இதனால் கடை திறக்கப்படவில்லை.

பின்னர் பொதுமக்கள் குரும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். அதில், குரும்பூரில் இருந்து நாலுமாவடி செல்லும் சாலையில் புதிய டாஸ்மாக் கடையை திறந்தால், பொதுமக்களுக்கு பெரிதும் இடையூறு ஏற்படும் என்று தெரிவித்து இருந்தனர். மேலும் இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்து இருந்தனர்.

அதன்படி டாஸ்மாக் கடைக்கு எதிராக பொதுமக்கள் நேற்று காலையில் குரும்பூர் பஜார் பிள்ளையார் கோவில் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தி.மு.க. ஒன்றிய செயலாளர் நவீன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் பாலம் ராஜன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராமஜெயம், பொன் சுந்தர், வர்த்தக மகமை சங்க தலைவர் நயினார் பாண்டியன், வியாபாரிகள் சங்க தலைவர் ஜோசுவா, விடுதலை சிறுத்தைகள் கட்சி கனிமுத்து, துரை, நாம் தமிழர் கட்சி திருவளவன், சின்னராஜா, தொழில் அதிபர்கள் கிஷோக், கரிகால ஆதித்தன், முரளி, வேலாயுதம், வெற்றிவேல், சுந்தர், தமிழக உழவர் முன்னணி தலைவர் தமிழ்மணி, பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினார்கள். 

Next Story