சிவகாசி அருகே நடுவப்பட்டியில் ஜல்லிக்கட்டு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்


சிவகாசி அருகே நடுவப்பட்டியில் ஜல்லிக்கட்டு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 21 Jan 2019 4:45 AM IST (Updated: 21 Jan 2019 1:24 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி அருகே ஈஞ்சார் நடுவப்பட்டியில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தர்.

விருதுநகர்,

சிவகாசி அருகே ஈஞ்சார் நடுவப்பட்டியில் 18 பட்டி கிராம மக்கள் சார்பில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ஆலடி ஈசுவரன் கோவில் முன்பு நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ராதாகிருஷ்ணன் எம்.பி., சிவகாசி ஆர்.டி.ஓ. தினகரன், தாசில்தார் பரமானந்தராஜா மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். மாடுபிடி வீரர்கள் அதிகாரிகள் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு வந்திருந்த காளைகளுக்கு மருத்துவ பரிசோதனைக்கு பின்பு பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. இதில் அலங்காநல்லூர், பாலமேடு, உசிலம்பட்டி, அவனியாபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 300–க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டன. இதில் 300 இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு காளைகளை அடக்கினர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாமல் போன காளைகளுக்கும் ரொக்கப்பணம், வெள்ளிக்காசுகள், சில்வர் பொருட்கள், கட்டில், பீரோ, குக்கர், செல்போன் உள்ளிட்ட பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை காண ஈஞ்சார், நடுவப்பட்டி, வேண்டுராயபுரம், மல்லி, வடபட்டி உள்ளிட்ட சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு ஞான சிவகுமார் தலைமையில் 200–க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

சிவகாசி அரசு மருத்துவமனை டாக்டர் ராஜன் தலைமையில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ வசதிகள் செய்யப்பட்டிருந்தன.


Next Story