புதுக்கோட்டையை சேர்ந்த 5 படகுகளை மீட்க மண்டபத்தில் இருந்து மீட்பு குழுவினர் இலங்கை பயணம்
புதுக்கோட்டையை சேர்ந்த 5 படகுகளை மீட்க மண்டபத்தில் இருந்து மீட்பு குழுவினர் இலங்கை புறப்பட்டு சென்றனர்.
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் தெற்கு மற்றும் வடக்கு கடற்கரை பகுதியில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்வார்கள். மண்டபத்தில் மட்டும் 500–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 300–க்கும் அதிகமான நாட்டுப்படகுகளும் உள்ளன. விசைப்படகில் செல்பவர்கள் அதிக தூரம் சென்று விலை உயர்ந்த மீன்களை பிடித்து வருவது வழக்கம். நாட்டுப்படகு மீனவர்கள் குறிப்பிட்ட தூரத்துக்குள் சென்று அவர்களது வலையில் சிக்கும் மீன்களை பிடித்து வருவார்கள். இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த விசைப்படகுகளை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து செல்வது அடிக்கடி நடைபெற்று வருகிறது.
இவ்வாறு கடந்த 2015–ம் ஆண்டு முதல் 2018–ம் ஆண்டு வரை எல்லைதாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 187 விசைப்படகுகளை இலங்கை நீதிமன்றம் கடந்த 2018–ம் வருடம் ஜூலை மாதம் விடுவித்தது.
அதனை தொடர்ந்து இந்த படகுகளை ஆய்வு செய்வதற்காக அதிகாரிகள் தலைமையில் மீனவர்கள், தொழிலாளர்கள் இலங்கை சென்றனர். இவர்கள் யாழ்ப்பாணம், காரைநகர், கிராஞ்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த தமிழக படகுகளின் தன்மை குறித்து ஆய்வு செய்தனர். இதில் தற்போது 46 படகுகள் மட்டுமே மீட்டுக்கொண்டு வரும் நிலையில் இருந்தது.
இதையடுத்து காரைநகர் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ராமேசுவரத்தை சேர்ந்த 22 படகுகளை எடுத்து வருவதற்காக கடந்த 17–ந்தேதி 9 படகுகளில் 71 மீனவர்கள் கொண்ட மீட்பு குழுவினர் மீன்துறை அதிகாரிகள் தலைமையில் இலங்கை புறப்பட்டு சென்றனர்.
இந்நிலையில் தற்போது அடுத்த கட்டமாக புதுக்கோட்டை மீனவர்களுக்கு சொந்தமான 5 படகுகளை மீட்க 5 படகுகளில் 21 மீனவர்கள் கொண்ட குழுவினர் நேற்று மண்டபத்தில் இருந்து இலங்கைக்கு புறப்பட்டு சென்றனர். நேற்று காலை 8 மணிக்கு புறப்பட்ட இவர்களை மண்டபம் கடலோர காவல்படையினர் அழைத்து சென்று சர்வதேச எல்லையில் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைத்தனர். இதேபோல கிராஞ்சி துறைமுகத்தில் உள்ள 13 படகுகளை மீட்டு கொண்டு வருவதற்காக வருகிற 25–ந்தேதி மீட்பு குழுவினர் அங்கு செல்ல உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.