கொடநாடு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டதும் முதல்–அமைச்சர் ஏன் பயப்படுகிறார்? டி.டி.வி.தினகரன் பேட்டி


கொடநாடு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டதும் முதல்–அமைச்சர் ஏன் பயப்படுகிறார்? டி.டி.வி.தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 21 Jan 2019 12:00 AM GMT (Updated: 20 Jan 2019 8:09 PM GMT)

கொடநாடு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டதும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஏன் பயப்படுகிறார்? என டி.டி.வி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பரமக்குடி,

ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரத்தை முதன்முதலாக பரமக்குடி தொகுதியில் தொடங்கி உள்ளோம். மக்கள் டாஸ்மாக்கிற்கு அதிக செலவு செய்கின்றனர். டாஸ்மாக்கை உடனே நிறுத்தினால் குடிப்பவர்களின் உடல்நலம் கெட்டுவிடும்.ஆகவே அதை படிப்படியாக குறைக்க வேண்டும்.

தமிழ்நாட்டு மக்களின் நலனில் தேசிய கட்சிகள் அக்கறை காட்டவில்லை. முல்லை பெரியாறு, காவிரி நீர் பிரச்சினை உள்பட எதிலும் அவர்கள் ஆர்வமும் காட்டவில்லை. காவிரி நீர் பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கூட இந்த அரசு நடைமுறை படுத்தவில்லை. தேசிய கட்சிகளுக்கு தமிழகத்தில் இனி இடமில்லை. அதனால் தான் அவர்கள் கேரளா, கர்நாடகா,ஆந்திராவிற்கு ஆதரவாக உள்ளனர். வட இந்தியாவில் மாநில கட்சிகள் தான் தனிப் பெரும்பான்மையாக விளங்குகிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றதுபோல் அ.ம.மு.க.வும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

தமிழக மக்கள் விரும்பாத மீத்தேன்,நியூட்ரினா எடுக்கும் திட்டம்,எட்டு வழி சாலை திட்டம் ஆகியவற்றை தற்போது உள்ள அரசு கொண்டு வந்துள்ளது.அதைபோல் தமிழ்நாட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்த நீட் தேர்வை அனுமதித்துள்ளனர்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆறாமீனைப் போல் உள்ளார்.இதை சாணக்கியத்தனம் என்கிறார்கள்.ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவோம் எனகூறிவிட்டு மம்தா பானர்ஜி நடத்திய கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.மக்கள் இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு தான் உள்ளனர்.தேர்தல் நேரத்தில் சரியான நேரத்தில் பாடம் புகட்டுவார்கள்.

கொடநாடு சம்பவத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது கொலைக் குற்றம் சாட்டும்போது என்னை விசாரிக்கட்டும் என எடப்பாடி பழனிசாமி சொல்ல வேண்டும்.ஆனால் அவர் அதை விட்டுவிட்டு பயப்படுகிறார்,பதட்டப் படுகிறார், அஞ்சுகிறார். ஆகையால் இது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.உப்பை தின்றவர்கள் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும்.உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி மூலம் இந்த வழக்கை விசாரிக்க வேண்டுமென நான் ஏற்கனவே கூறியுள்ளேன்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயரை சொல்லி பா.ஜ.க. வாக்குகளை பெற நினைக்கிறது. எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா கனவை பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார் என மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியிருப்பது சிரிப்பாக உள்ளது.

10 லட்சம் பேர் கொண்ட பட்டாசு தொழிலை பாதுகாக்கவேண்டும். அத்தைக்கு மீசை முளைப்பது போல் தான் தி.மு.க.ஆட்சிக்கு வருவது.20 தொகுதிகளுக்கும் தேர்தல் தள்ளிப் போகிறது. எங்கள் எம்.எல்.ஏ.க்களை அ.தி.மு.க.வினர் தொடர்பு கொண்டு அதை தருகிறோம்,இதைத் தருகிறோம் என சொல்லி அப்பீல் செய்யுங்கள் என்கிறார்கள். நாங்கள் கண்டிப்பாக அப்பீல் செய்யமாட்டோம்.இந்த ஆட்சி தொடர கூடாது என மக்கள் விரும்புகின்றனர். நாடாளுமன்ற தேர்தலுடன் 20 தொகுதிக்கான இடைத் தேர்தல் வரும். அதில் அ.ம.மு.க. வெற்றி பெறும். தேர்தல் கூட்டணி குறித்து யாரும் பேசவில்லை. வந்தால் பார்ப்போம். இவ்வாறு அவர் கூறினர்.


Next Story