குழிப்பாந்தண்டலம் சுடுகாட்டு பாதை விவகாரம் போலீஸ் பாதுகாப்புடன் முதியவரின் உடல் தகனம்


குழிப்பாந்தண்டலம் சுடுகாட்டு பாதை விவகாரம் போலீஸ் பாதுகாப்புடன் முதியவரின் உடல் தகனம்
x
தினத்தந்தி 21 Jan 2019 3:15 AM IST (Updated: 21 Jan 2019 1:46 AM IST)
t-max-icont-min-icon

குழிப்பாந்தண்டலம் சுடுகாட்டு பாதை விவகாரம் இன்னும் முடிவுக்கு வராததால் இறந்த முதியவர் ஒருவரின் உடல் போலீஸ் பாதுகாப்புடன் தற்காலிக இடத்தில் தகனம் செய்யப்பட்டது.

மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த குழிப்பாந்தண்டலத்தில் பாரம்பரியமாக பயன்படுத்திய சுடுகாட்டு பாதை இடத்தை தனிநபர் ஒருவர் வாங்கி மதில்சுவர் எழுப்பிவிட்டார். இதனால் இறந்தவர்களின் உடலை சுடுகாட்டுக்கு கொண்டு செல்ல மாற்று வழி இல்லாமல் அந்த கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக அந்த கிராம மக்கள் பல கட்ட போராட்டங்களையும் நடத்தினர்.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 5-ந் தேதி ரோசம்மாள் என்ற மூதாட்டி இறந்து சுடுகாட்டில் புதைக்க முயன்ற போது வருவாய்த்துறையினர் மற்றும் காவல் துறையினர் தடுத்தனர். பின்னர் அந்த மூதாட்டி உடலை சுடுகாட்டு பாதையை மறித்துள்ள தனியார் சுற்றுச்சுவர் முன்புறம் கிராம மக்கள் தகனம் செய்தனர்.

நேற்று முன்தினம் ஏகாம்பரம் (வயது 65) என்பவர் இறந்தார். அவரது உடலை மூதாட்டியை புதைத்த முந்தைய தகன பகுதியில் புதைக்க அந்த பகுதியினர் முடிவெடுத்தனர். பிறகு திருக்கழுக்குன்றம் தாசில்தார் வரதராஜன், திருக்கழுக்குன்றம் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி ஆகியோர் குழிப்பாந்தண்டலம் கிராம முக்கிய பிரமுகர் பத்மநாபன், பா.ம.க. மாவட்ட செயலாளர் காரணை ராதா, மாவட்ட தலைவர் கணேசமூர்த்தி மற்றும் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மூதாட்டி தகனம் செய்யப்பட்ட இடத்திலேயே முதியவர் உடலை தகனம் செய்ய அனுமதித்தனர். சுடுகாட்டு பாதை பிரச்சினையால் போலீசார் குவிக்கப்பட்டதால் அங்கு சில மணி நேரம் பதற்றம் ஏற்பட்டது.

இறந்தவர்களின் உடலை கொண்டு செல்ல நிரந்தர பாதை ஏற்படுத்தி தர வேண்டும் என்று காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையாவுக்கு குழிப்பாந்தண்டலம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story