எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றி பெறும் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேச்சு


எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றி பெறும் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேச்சு
x
தினத்தந்தி 21 Jan 2019 4:30 AM IST (Updated: 21 Jan 2019 1:53 AM IST)
t-max-icont-min-icon

எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றி பெறும் என்று தர்மபுரி பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

தர்மபுரி,

தர்மபுரி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தர்மபுரி குமாரசாமிப்பேட்டை வாரியார் பள்ளி எதிரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர செயலாளர் குருநாதன் தலைமை தாங்கினார். நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம் வரவேற்று பேசினார். நகர கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர். வெற்றிவேல், நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய செயலாளர் பெரியண்ணன், நகர எம்.ஜி.ஆர். மன்ற இளைஞரணி பொருளாளர் செந்தில்குமார், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுமதி, முன்னாள் ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி, முன்னாள் நகர துணை செயலாளர் பூக்கடை ரவி மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சரும், தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான கே.பி. அன்பழகன் கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் வழிகாட்டுதலின்படி தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் தர்மபுரி மாவட்டத்திற்காக அறிவிக்கப்பட்ட ஒவ்வொரு திட்டமும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஜனநாதன்கோம்பை அணைக்கட்டு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. எண்ணேகொள்புதூர் தடுப்பணை திட்டத்தின் கீழ் தர்மபுரி மாவட்ட ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டுவரும் திட்டப்பணிகள் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதே போன்று தர்மபுரி அவ்வையார் அரசு பள்ளிக்கு அருகில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான இடத்தினை கையகப்படுத்தி புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை நிறைவேற்றுவதில் அ.தி.மு.க. அரசு திறம்பட செயல்பட்டு வருகிறது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர் கட்சியினர் தமிழக அரசுக்கு எதிராகவும், முதல்-அமைச்சருக்கு எதிராகவும் பொய் பிரசாரங்களை பரப்பி வருகின்றனர். இதனை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். தமிழகத்தில் எப்போதும் எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றி பெறும். தமிழக அரசுக்கு மக்கள் என்றும் ஆதரவாக இருப்பார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது நல்லாசியுடன் தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்களுக்கு பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் விவசாய அணி மாநில தலைவர் டி.ஆர்.அன்பழகன், தலைமை கழக பேச்சாளர் ஆவடி குமார், மாவட்ட பொருளாளர் நல்லதம்பி, சார்பு அமைப்பு மாவட்ட செயலாளர்கள் பழனிசாமி, மோகன், கூட்டுறவு பணியாளர் சங்க மாநில செயலாளர் சின்.அருள்சாமி, முன்னாள் நகர செயலாளர் ரவி, மாவட்ட பிரதிநிதி பொன்னுவேல், முன்னாள் ஒன்றிய செயலாளர் டாலி ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் நகர துணை செயலாளர் அறிவாளி நன்றி கூறினார்.

Next Story