ஓசூரில் வெவ்வேறு விபத்துகளில் 3 வாலிபர்கள் பலி 2 பேர் படுகாயம்


ஓசூரில் வெவ்வேறு விபத்துகளில் 3 வாலிபர்கள் பலி 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 20 Jan 2019 10:45 PM GMT (Updated: 20 Jan 2019 8:32 PM GMT)

ஓசூரில் வெவ்வேறு விபத்துகளில் 3 வாலிபர்கள் பலியானார்கள். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஓசூர்,

திருப்பூர் மாவட்டம் பொங்கலூரை சேர்ந்த ரத்தினசாமி என்பவரது மகன் சஞ்சய் (வயது 22). அதே மாவட்டம் வெள்ளக்கோவிலை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் கார்த்திக்(22). திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த முருகன் மகன் கேசவபாலன்(21). இவர்கள் 3 பேரும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் இரண்டாவது சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர்.

இவர்கள் 3 பேரும் ஓசூர் அருகே அத்திப்பள்ளியில் வாடகை அறையில் தங்கி, வேலைக்கு சென்று வந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு பணியை முடித்துக்கொண்டு 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் அத்திப்பள்ளி நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.

ஓசூர் ரிங்ரோடு, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி அருகே சென்றபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு, சஞ்சய் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரும் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மற்றொரு நண்பரான கேசவபாலன் பலத்த காயமடைந்து, ஓசூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சிப்காட் போலீசார் விரைந்து சென்று இறந்த 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதே போல் கர்நாடக மாநிலம் கதக் மாவட்டம் எல்லாபுரா கிராமத்தை சேர்ந்த மல்லன் கவுடா(30) என்பவர், பெல்காம் மாவட்டம் காந்தி நகரை சேர்ந் ஸ்ரீசைலம்(28) என்ற நண்பருடன், மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு ஓசூர் நோக்கி வந்தார். வழியில் ஓசூர் முதலாவது சிப்காட் பகுதியில் உள்ள பஸ் ஸ்டாப் வளைவு அருகே அந்த வழியாக சென்ற மினி லாரியின் பின்புறம் அவரது மோட்டார் சைக்கிள் வேகமாக மோதியது.

இதில் மல்லன் கவுடா சம்பவ இடத்திலேயே பலியானார். ஸ்ரீசைலம் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த 2 விபத்துகள் குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Next Story