‘சக்தி’ திட்டம் தொடக்க விழா: புதுச்சேரிக்கு 6 மாதத்தில் மாநில அந்தஸ்து நாராயணசாமி உறுதி


‘சக்தி’ திட்டம் தொடக்க விழா: புதுச்சேரிக்கு 6 மாதத்தில் மாநில அந்தஸ்து நாராயணசாமி உறுதி
x
தினத்தந்தி 21 Jan 2019 12:00 AM GMT (Updated: 20 Jan 2019 8:36 PM GMT)

ராகுல் காந்தி பிரதமர் ஆனதும் 6 மாதத்தில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என நாராயணசாமி உறுதி அளித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் ‘சக்தி‘ திட்டம் தொடக்க விழா கம்பன் கலையரங்கத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார். இதில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் ஆகியோர் சக்தி திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

காங்கிரஸ் கட்சியின் தகவல் ஆய்வுத்துறை தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி, காங்கிரஸ் கட்சியின் செயலாளர் சஞ்சய் தத் ஆகியோர் சக்தி திட்டத்தை விளக்கி பேசினர்.

விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் ஏக்கத்தை தீர்க்கும் வகையில் சக்தி திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலமாக தொண்டர்கள் தங்களின் கருத்துகளையும், ஆலோசனைகளையும் நேரடியாக கட்சி தலைவர் ராகுல் காந்தியிடம் தெரிவிக்க முடியும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும். ராகுல் காந்தி பிரதமராவார். அதனை நரேந்திர மோடி மட்டுமல்ல எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. மத்தியில் மோடி, புதுவையில் பேடி இருக்கிறார்கள். ராகுல்காந்தி பிரதமர் ஆனதும் 6 மாதத்தில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை பெறுவோம்.

கவர்னர் மாளிகைக்கு ஒரு வருடத்திற்கு ரூ.4 கோடி செலவாகிறது. அதற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய ஊதியத்துக்கு கவர்னர் முட்டுக்கட்டையாக உள்ளார். ராகுல் காந்தியை பிரதமராக வர அனைவரும் வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் நமச்சிவாயம் பேசுகையில், ‘புதுச்சேரியில் சக்தி திட்டம் புதிய சகாப்தத்தை உருவாக்கும். இதில் நாடு முழுவதும் இதுவரை 54 லட்சம் பேர் இணைந்து உள்ளனர். மாவட்ட, தொகுதி, பூத் வாரியாக சக்தி திட்டத்தை கொண்டு செல்ல வேண்டும். வருகிற 31-ந் தேதிக்குள் புதுச்சேரியில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் வார்டுகளுக்கும் சென்று உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்’ என்றார்.

விழாவில் பேசிய முகுல் வாஸ்னிக், ‘புதுச்சேரி அரசை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. பல தடைகளை தாண்டி புதுச்சேரி அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மத்தியில் ஆளும் நரேந்திர மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் நெருங்கிவிட்டது’ என்றார்.

விழாவில் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ், கமலக்கண்ணன், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன், எம்.என்.ஆர்.பாலன், தீப்பாய்ந்தன், தனவேலு, ஜெயமூர்த்தி, விஜயவேணி, புதுவை அரசு டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார் உள்பட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முன்னதாக புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் வரவேற்று பேசினார்.


Next Story