பொதுமக்களுக்கு அடிப்படை வசதி செய்து தராத 3 ஊராட்சி செயலாளர்கள் பணி இடைநீக்கம் கலெக்டர் உத்தரவு


பொதுமக்களுக்கு அடிப்படை வசதி செய்து தராத 3 ஊராட்சி செயலாளர்கள் பணி இடைநீக்கம் கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 20 Jan 2019 11:00 PM GMT (Updated: 20 Jan 2019 8:48 PM GMT)

பொதுமக்களுக்கு அடிப்படை வசதி செய்து தராத 3 ஊராட்சி செயலாளர்களை பணி இடைநீக்கம் செய்து கலெக்டர் ரோகிணி உத்தரவிட்டுள்ளார்.

சேலம்,

சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி, காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் குடிநீர், தெருவிளக்கு, சாக்கடை கால்வாய், சாலை வசதி உள்பட அடிப்படை வசதி மேம்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது பண்ணப்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, கணவாய் புதூர் ஆகிய ஊராட்சியில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தராதது கண்டு பிடிக்கப்பட்டது.

இதையொட்டி பண்ணப்பட்டி ஊராட்சி செயலாளர் ஜெயவேல், கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி செயலாளர் முருகன், கணவாய்புதூர் ஊராட்சி செயலாளர் அமரவேல் ஆகிய 3 பேர் பணி இடைநீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.

இது குறித்து கலெக்டர் ரோகிணியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில், மக்களின் அடிப்படை தேவைகள் முழுமையாக நிறைவேற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முழுமையாக நிறைவேற்ற முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வரப் படுகிறது.

அதே போன்று பொதுமக்களின் தேவைகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மாவட்டம் முழுவதும் நேரில் சென்று அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள், ஊராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சி பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொண்டு மக்களின் குறைகள் கேட்டு உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

அதன்படி, காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பண்ணப்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, கணவாய்புதூர் ஆகிய ஊராட்சிகளில் திடீர் ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகள் கேட்ட போது, பொது மக்களுக்கு குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராதது கண்டுபிடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட 3 ஊராட்சி செயலாளர்கள் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளேன்.

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதில் அரசு அலுவலர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு உள்ளது. குடிநீர், கழிப்பிட வசதி, தெருவிளக்கு, சாலை வசதி, சாக்கடை வசதி உள்ளிட்டவற்றை கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து பகுதிகளிலும் முழுமையாக நிறைவேற்ற அரசு அலுவலர்கள் முனைப்போடு பணியாற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது.

அடிப்படை தேவைகளை நிறைவேற்றாமல் பணியில் மெத்தனமாக இருக்கும் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அருள்ஜோதி அரசன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ராஜேந்திரன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Next Story