பெரிய அணைக்கரைப்பட்டி ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 15 பேர் காயம்


பெரிய அணைக்கரைப்பட்டி ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 15 பேர் காயம்
x
தினத்தந்தி 20 Jan 2019 10:45 PM GMT (Updated: 20 Jan 2019 9:17 PM GMT)

பெரிய அணைக்கரைப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 15 பேர் காயமடைந்தனர்.

வையம்பட்டி,

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே பெரிய அணைக்கரைப்பட்டியில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. புனித அந்தோணியார் பொங்கலை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு ரமேஷ்பாபு கொடி அசைத்து தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளைகள் தாரை, தப்பட்டையுடன் வாடிவாசலுக்கு அழைத்து வரப்பட்டு, ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது.

அதைத்தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை என பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை, வீரர்கள் அடக்கினர். இதில் சில காளைகள், அடக்க வந்த வீரர்களை பந்தாடியது. சில காளைகள், வீரர்களிடம் பிடிபட்டது. இதில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளருக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் கட்டில், பீரோ, மேஜை, சைக்கிள், சில்வர் பாத்திரங்கள், வெள்ளி நாணயங்கள், குத்து விளக்கு, சுவர் கடிகாரம் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டது.

மாடுபிடி வீரர்கள் ஒவ்வொரு குழுவாக பிரிக்கப்பட்டு போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, தகுதி உள்ள காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் மட்டுமே போட்டிக்கு அனுமதிக்கப்பட்டனர். போட்டியில் 456 காளைகளும், 282 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.இதில் ஒரு காளை தன்னை அடக்க முயன்ற வீரருடன் தடுப்பு வேலியில் பாய்ந்தது. மேலும் காளைகள் முட்டித்தள்ளியதில் 15 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு அதே பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

விதிமுறைகளின்படி ஜல்லிக்கட்டு போட்டி நடை பெறுகிறதா என்பதை மணப்பாறை தாசில்தார் சித்ரா தலைமையிலான வருவாய்த்துறையினரும், போலீஸ் துணை சூப்பிரண்டு சர்மு தலைமையிலான போலீசாரும் மற்றும் கால்நடைத்துறை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகளும் தொடர்ந்து கண்காணித்தனர். மேலும் சுழல் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர். இந்த ஜல்லிக்கட்டை ஏராளமானவர்கள் கண்டு ரசித்தனர். 

Next Story