ஆம்பூர் அருகே மரத்தில் கார் மோதி 4 பேர் பலி மாநாட்டுக்கு சென்றுவிட்டு திரும்பியவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்
ஆம்பூர் அருகே மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆம்பூர்,
பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த முஹம்மத்அயூப்கான் மகன் முஹம்மத் ஷபான் (வயது 22), சல்மான் அஹமத் மகன் முஹம்மத் இம்ரான் (22), அமான் மகன் உசேன் (22), அப்துல்ரஹ்மான் மகன் முஜம்மில் (22), ஷகீல் அஹமத் மகன் துபேல் (22), நஜர் மகன் சல்மான் (21), முஹம்மத் கான் மகன் சல்மான் (21) ஆகிய 7 பேரும் குடியாத்தம் அருகே உள்ள மேல்ஆலத்தூர் பகுதியில் நடந்த ‘இஸ்திமா’ எனப்படும் இஸ்லாமிய மாநாட்டிற்கு சென்றனர். பின்னர் அவர்கள் அதே காரில் ஆம்பூர் வழியாக பேரணாம்பட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
ஆம்பூரை அடுத்த சின்னவரிக்கம் கிராமம் அயித்தம்பட்டு கூட்ரோடு பகுதியில் வந்த போது திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் காரில் இருந்த முஹம்மத் ஷபான், முஹம்மத் இம்ரான், உசேன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் முஜம்மில், துபேல், சல்மான், மற்றொரு சல்மான் ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அந்த பகுதியில் இருந்தவர்கள் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக முஜம்மில், துபேல் ஆகியோர் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதில் முஜம்மில் சிகிச்சை பலனின்றி இறந்தார். தகவல் அறிந்த ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம் மற்றும் உமராபாத் போலீசார் விரைந்து சென்று இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து உமராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் அமைச்சர் நிலோபர் கபில், ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். விபத்தில் இறந்தவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்களுக்கு நிவாரண நிதி பெற்று தருவதாக அவர் கூறினார்.
அப்போது ஆம்பூர் நகர அ.தி.மு.க. செயலாளர் எம்.மதியழகன், முன்னாள் நகரசபை துணைத்தலைவர் நஜர்முஹமத் ஆகியோர் உடன் இருந்தனர்.
விபத்தில் இறந்த 4 பேரில், முஹம்மத் ஷபான், முஹம்மத் இம்ரான், உசேன் ஆகியோர் வாணியம்பாடியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநாட்டுக்கு சென்று திரும்பியபோது மரத்தில் கார் மோதி 4 பேர் இறந்த சம்பவம் ஆம்பூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story