அரசு தடை எதிரொலியால் தினமும் 800 கிலோ வீதம் பிளாஸ்டிக் கழிவுகள் குறைந்துள்ளது அதிகாரிகள் தகவல்


அரசு தடை எதிரொலியால் தினமும் 800 கிலோ வீதம் பிளாஸ்டிக் கழிவுகள் குறைந்துள்ளது அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 21 Jan 2019 4:51 AM IST (Updated: 21 Jan 2019 4:51 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை நகராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் கழிவு தினமும் 800 கிலோ வீதம் குறைந்துள்ளது என்று அதிகாரிகள் கூறினர்.

திருவண்ணாமலை, 

தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த 1-ந் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்களிடம் விளக்கும் வகையில் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம், துண்டுப் பிரசுரம் வழங்குதல், ஆட்டோ, பஸ் போன்ற வாகனங்களில் வாசகங்கள் எழுதிய, ஸ்டிக்கர் ஒட்டுவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

மேலும் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் நகராட்சி சார்பில் திருவண்ணாமலை அசலி அம்மன் கோவில் தெருவில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்றுப் பொருட்கள் விற்பனை அங்காடியும் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

அதுமட்டுமின்றி திருவண்ணாமலை நகராட்சி அலுவலர்கள் மூலம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அவ்வாறு விற்பனை செய்யப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்பட்டும் வருகிறது.

இந்த நிலையில் திருவண்ணாமலை நகராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் கழிவுகள் குறைந்துள்ளதாக நகராட்சி துப்புரவு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

திருவண்ணாமலை நகராட்சி 39 வார்டுகளை உள்ளடக்கிய பகுதியாகும். பிளாஸ்டிக் பொருட்கள் அரசால் தடை செய்யப்பட்டதில் இருந்து அதன் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளது. திருவண்ணாமலை நகராட்சி பகுதிகளில் இருந்து ஒரு நாளைக்கு சுமார் 60 டன் குப்பைகள் சேகரிக்கப்படும். இதில் 1 முதல் 1½ டன் வரை தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் கழிவுகளாகவே இருக்கும். அரசின் தடை உத்தரவிற்கு பிறகு ஒரு நாளைக்கு சுமார் 800 கிலோ வரை தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் கழிவுகள் குறைந்துள்ளது. நகர பகுதிகளில் இவற்றின் பயன்பாடு குறைந்து உள்ளது.

கிராமப் புறங்களில் மட்டுமே தற்போது செயல்பாட்டில் உள்ளது. அங்கேயும் ஆய்வு செய்து அதனை பறிமுதல் செய்து அகற்றுவதன் மூலம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு முழுமையாக குறைந்து விடும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story