காணொலி காட்சி மூலம் மராட்டிய பா.ஜனதா தொண்டர்களுடன் மோடி கலந்துரையாடல் ‘‘எதிர்க்கட்சிகள் ஊழல் கூட்டணி அமைத்து இருக்கிறார்கள்’’


காணொலி காட்சி மூலம் மராட்டிய பா.ஜனதா தொண்டர்களுடன் மோடி கலந்துரையாடல் ‘‘எதிர்க்கட்சிகள் ஊழல் கூட்டணி அமைத்து இருக்கிறார்கள்’’
x
தினத்தந்தி 21 Jan 2019 5:26 AM IST (Updated: 21 Jan 2019 5:26 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய பா.ஜனதா தொண்டர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். எதிர்க்கட்சிகள் ஊழல் கூட்டணி வைத்திருப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

மும்பை,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மெகா கூட்டணி அமைக்கும் பணியில் இறங்கி உள்ளன. அந்தவகையில் 14 கட்சிகளை சேர்ந்த சுமார் 22 தலைவர்கள் நேற்று முன்தினம் கொல்கத்தாவில் கூடி பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தினர்.

எதிர்க்கட்சிகளின் இந்த மெகா கூட்டணியை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்து உள்ளார். தெற்கு கோவா மற்றும் மராட்டியத்தின் கோலாப்பூர், மதா, சத்தாரா உள்ளிட்ட நாடாளுமன்ற தொகுதிகளை சேர்ந்த வாக்குச்சாவடி மட்டத்திலான பா.ஜனதா தொண்டர்களுடன் நேற்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடிய அவர், இது தொடர்பாக கூறியதாவது:-

கொல்கத்தாவில் எதிர்க்கட்சிகளின் மேடையில்அமர்ந்திருந்த தலைவர்களில் பெரும்பாலானவர்கள் பிரபலமானவர்களின் மகனாகவோ அல்லது தங்கள் குழந்தைகளை அரசியலில் பிரபலமாக்குவதற்கு முயற்சிப்பவராகவோ தான்இருந்தார்கள். அவர்களிடம் பணபலம் உள்ளது. ஆனால் எங்களிடம் மக்கள் சக்தி இருக்கிறது.

அவர்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துள்ளனர். ஆனால் நாங்களோ 125 கோடி மக்களுடன் கூட்டணி அமைத்திருக்கிறோம். இதில் எந்த கூட்டணி பலமானது? என்பதை நீங்களே எண்ணிப்பாருங்கள்.

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் இன்னும் நடைபெறவில்லை. ஆனால் அதற்குள், வரவிருக்கும் தங்களின் தோல்விக்கு சாக்குபோக்கு கண்டுபிடிக்கும் பணியில் அவர்கள் இறங்கி விட்டனர். அதற்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வில்லனாக்கி விட்டனர்.

அந்த மேடையில் பேசியவர்கள் ஜனநாயகத்தை பாதுகாப்பது பற்றி பேசினார்கள். ஆனால் அந்த மேடையை பார்த்த போது எனக்கோ, போபர்ஸ் பீரங்கி ஊழல்தான் நினைவுக்கு வந்தது. உங்களால் அதிக நாட்களுக்கு உண்மையை மறைக்க முடியாது.

இந்த கூட்டணியில் மிகப்பெரிய பெயர்கள், குடும்பங்கள், ஊழல், லஞ்சம், எதிர்மறைத்தன்மை, நிலைத்தன்மை இல்லாமை, சமத்துவமின்மை போன்றவை நிறைந்துள்ளன. நாடாளுமன்ற தேர்தலுக்கு ஊழல் கூட்டணி அமைத்து இருக்கிறார்கள். அந்தவகையில் இது தனித்துவமானது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் நடவடிக்கை எதிர்க்கட்சிகளின் தூக்கத்தை கெடுத்து இருக்கிறது. இதனால் அவர்கள் பொய்களையும், வதந்திகளையும் பரப்பி வருகின்றனர். நாம் நமது பணியை சரியாக செய்திருப்பதையே இது காட்டுகிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கரையும் பிரதமர் மோடி பாராட்டினார். பாரிக்கரை நவீன கோவாவின் சிற்பி என புகழ்ந்துரைத்த மோடி, உடல் நலமின்றி இருக்கும் அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் கூறினார்.

Next Story