விடுதலை செய்யக்கோரி வேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம் அதிகாரிகள் சமரசத்தை ஏற்று வாபஸ் பெற்றார்
ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி முருகன், தன்னை விடுதலை செய்யக்கோரி வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருந்தார். எனினும் அதிகாரிகள் சமரசத்தை ஏற்று உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.
வேலூர்,
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன், பேரறிவாளன் உள்ளிட்டோர் வேலூர் ஆண்கள் மத்திய சிறையிலும், முருகனின் மனைவி நளினி பெண்கள் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 27 ஆண்டுகளாக இந்த வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரும் விடுதலைக்காக போராடி வருகின்றனர்.
இவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக கவர்னர் முடிவெடுத்துக்கொள்ளலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. இதனால் நளினி-முருகன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி அதை கவர்னருக்கு அனுப்பி வைத்தது. ஆனால் தீர்மானம் நிறைவேற்றி 4 மாதங்களாகியும் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
அதேநேரம் தமிழக அரசின் தீர்மானத்தை கவர்னர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையில் முருகன்-நளினி ஆகியோர் இருந்ததாகவும், அது நிறைவேறாததால் அவர்கள் சோர்வடைந்து விட்டதாகவும் அவர்களது வக்கீல் புகழேந்தி தெரிவித்து உள்ளார். கடந்த 8-ந்தேதி சிறையில் அவர்களை சந்தித்த புகழேந்தி, அடுத்த கட்டமாக ஐகோர்ட்டை அணுக உள்ளதாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் சிறை விதிகளின்படி 15 நாட்களுக்கு ஒருமுறை முருகனும், நளினியும் சந்தித்து வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் காலை 1 மணி நேரம் இருவரும் சந்தித்து பேசினர். பின்னர் அன்று பிற்பகலில் இருந்து முருகன் உணவு உண்ணாமல் உண்ணாவிரதம் இருக்க தொடங்கினார்.
தன்னை விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரதம் இருப்பதாக சிறை கண்காணிப்பாளருக்கு அவர் மனு அளித்ததாக தெரிகிறது. மேலும், விடுதலை செய்யக்கோரி தமிழக கவர்னருக்கு மனு ஒன்றை அனுப்பி வைக்கும்படியும் சிறை அதிகாரிகளிடம் அவர் வழங்கினார்.
இந்த உண்ணாவிரதம் நேற்று 2-வது நாளாகவும் நீடித்தது. எனவே அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் சிறை அதிகாரிகள் ஈடுபட்டனர். பிற்பகலில் சிறை சூப்பிரண்டு ஆண்டாள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து முருகன் உண்ணாவிரதத்தை கைவிட்டார்.
முன்னதாக ஜடாமுடி தரித்த முருகன் ‘ஜீவசமாதி’ அடைவதற்காக கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 18-ந் தேதி தொடர் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். அப்போதும் சிறைத்துறையினரின் பேச்சுவார்த்தைக்கு செவிமடுத்து 13 நாட்களில் உண்ணாவிரதத்தை கைவிட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story