ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வாய்ப்பில்லை “பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம்”
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வாய்ப்பில்லை, எனவே பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார். இதுகுறித்து அவர் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தூத்துக்குடி,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தற்போதைய நிலை தொடர்ந்து வருகிறது. இதுதொடர்பான வழக்கில் ஏற்கனவே தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து உள்ளது. அரசு அறிவிப்பின்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசு ஆலையை திறக்கக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளது.
மக்கள் என்ன நினைக்கிறார்களோ, அதன்படி அரசு செயல்பட்டு வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வாய்ப்பில்லை. எனவே, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம்.
கடந்த 1-ந்தேதி முதல் ஒருமுறை மட்டும் உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டு உள்ளது. இதனால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறதா? என்று பல்வேறு கடைகளில் சோதனை செய்து வருகிறோம். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறோம். தற்போது மக்களிடமும், கடைகளிலும் நல்ல மாற்றம் வந்து உள்ளது. இதுவரை யாருக்கும் அபராதம் விதிக்கப்படவில்லை.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் கற்பழிக்கப்பட்டாரா, அவருக்கு என்ன நடந்தது? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது அவருடைய உடல்நிலை தேறி வருகிறது.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட படகுகள் விடுவிக்கப்பட்டு உள்ளன. இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 3 படகுகளும் விடுவிக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கான ரூ.500 கோடி இலக்கை எட்டி உள்ளோம். இலவச வேட்டி, சேலை 100 சதவீதம் வந்து உள்ளது. மக்கள் யாரும் வாங்காமல் இருந்தால் ரேஷன் கடையில் வாங்கிக் கொள்ளலாம்.
ஓட்டப்பிடாரம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளார். அதனால் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார். குழந்தைகள் தத்தெடுப்பதற்கு பல வழிமுறைகள் உள்ளன. அதன்படி மட்டுமே தத்தெடுக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் விதிமுறையை மீறி தத்தெடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். உணவு பாதுகாப்பு அலுவலர் தடை செய்யப்பட்ட பொருட்கள், கலப்பட உணவு பொருட்களை கண்டறிவது, ஓட்டல்களுக்கு உரிமம் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
தாமிரபரணி ஆற்றில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கொடுப்பது நிறுத்தப்பட்டு உள்ளது. தினமும் தொழிற்சாலைகளுக்கு 40 எம்.எல்.டி. தண்ணீர் வரை தேவைப்படுகிறது. இதனால் கழிவுநீரை சுத்திகரித்தும், கடல்நீரை குடிநீராக மாற்றியும் தொழிற்சாலைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆலந்தலையில் கடல்நீர் குடிநீராக்கும் திட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் உள்ளது. இதுவரை திட்டத்துக்கு உரிய அனுமதி அளிக்கப்படவில்லை. இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.
Related Tags :
Next Story