மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் தூத்துக்குடியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி கலெக்டரிடம் மனு
தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
அப்போது உடன்குடி அருகே உள்ள கல்லாமொழி சுனாமி காலனியை சேர்ந்த ஜேம்ஸ் பீட்டர் மற்றும் சிலர் கோரிக்கை மனுவை கலெக்டரிடம் கொடுத்தனர். அந்த மனுவில், மதுபானங்களால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. மதுபான நோயாளிகளால் பெரும்பாலான சீர்கேடுகள், வீட்டிலும், நாட்டிலும் அரங்கேறி கொண்டு இருக்கின்றன. எனவே மதுபான கடைகளை மூட வேண்டும். மதுவிலக்கு சட்டத்தை செயல்படுத்த வேண்டும். மதுபான நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை வழங்கி குணம் பெற செய்ய வேண்டும் என்று கூறி இருந்தனர்.
நாலுமாவடி பணிக்கநாடார் குடியிருப்பை சேர்ந்த பொன்சுந்தர் மற்றும் சிலர் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் பொதுமக்கள் அதிகம் இருக்கும் பகுதியில் மதுபான கடை திறக்கப்பட உள்ளதாக அறிந்தோம். அவ்வாறு மதுபான கடை திறக்கப்பட்டால் பொதுமக்கள், வேலைக்கு செல்பவர்கள், பள்ளி-கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் என அனைவரும் பாதிக்கப்படுவார்கள். எனவே எங்கள் பகுதியில் மதுக்கடை திறக்க அனுமதிக்க கூடாது என்று தெரிவித்து இருந்தனர். நெல்லை மாவட்டம் கடையநல்லூர் தாலுகா தலைவன்கோட்டையை சேர்ந்த பூங்கொடி என்பவர் தனது மகன் மோகனசூர்யாவுடன் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தார். அவர் கொடுத்த மனுவில், எனது கணவர் தங்கதுரை ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி பல போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார். ஆனால் ஆலை திறக்கப்படாததால் கடந்த 3 மாதங்களாக மனமுடைந்து காணப்பட்டார். கடைசியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி தற்கொலை செய்து கொண்டார். தற்போது நானும், எனது குழந்தைகளும் அடுத்த வேளை உணவுக்கு கூட வழியின்றி கஷ்டப்படுகிறோம். ஆதரவற்ற விதவையான எனக்கும், என் குழந்தைகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், பருவ மழையளவு குறைவு, பயிர்களில் படைப்புழு தாக்குதல், உரத்தட்டுப்பாடு போன்ற காரணங்களால் விவசாய பயிர்கள் முழுவதும் பாதிக்கப்பட்டு உள்ளன. எனவே தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டு உள்ள விவசாய பயிர்களுக்கு 100 சதவீதம் முழுமையான பயிர் காப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் போர்க்கால அடிப்படையில் நிவாரண தொகை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். காயல்பட்டினம் தேங்காய் பண்டகசாலை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், கடந்த 1994-ம் ஆண்டு காயல்பட்டினம் தேங்காய்பண்டக சாலை பகுதியில் வசித்து வரும் ஆதிதிராவிட மக்களுக்கு அரசு கொடுத்த இலவச வீட்டுமனை பட்டாவை 3 பேர் ஆக்கிரமித்து உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அந்த இடத்தை மீட்டு தர வேண்டும் என்று கூறி இருந்தனர்.
எட்டயபுரம் தாலுகா நென்மேனி காலனி தெருவை சேர்ந்த விஜயா தனது 2 மகள்களுடன் நேற்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில், தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் செய்தார். பின்னர் அவர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எனது கணவர் சோலைராஜ். எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. நான் 4 ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறேன். எனது குழந்தைகள் மாசார்பட்டி அருகே ராஜாப்பட்டியில் உள்ள தனியார் தொடக்கப்பள்ளியில் படித்து வந்தார்கள். அங்குள்ள ஆசிரியர்கள் சிலர் எனது கணவர் வீட்டாரின் பேச்சை கேட்டு என் குழந்தைகளை திட்டியும் அடித்தும் வந்தனர். இதுதொடர்பாக நான் அவர்களிடம் கேட்ட போது அப்படி தான் செய்வோம். வேண்டுமென்றால் டி.சி. வாங்கி செல்லுங்கள் என்று கூறுகிறார்கள். மேலும் எனது கணவரிடம் சொல்லி, அவர் என்னை அரிவாளால் வெட்ட வருகிறார். இதனால் எனது பிள்ளைகள் கடந்த 10 நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார்கள். எனது பிள்ளைகள் எந்த பிரச்சினையும் இல்லாமல் பள்ளியில் படிக்க வேண்டும். என்னை வெட்ட வந்த கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
இந்து முன்னணி மாநகர் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் கொடுத்த மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 24-ந்தேதி வீடுகள், வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள் அனைத்திலும் கருப்பு கொடி கட்ட வேண்டும் என்று சிலர் அறிக்கை வெளியிட்டு தூத்துக்குடியில் மீண்டும் பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். ஸ்டெர்லைட் ஆலையை பொறுத்தவரை உச்சநீதிமன்றத்திலும், பசுமை தீர்ப்பாயத்திலும் வழக்கு நடந்து வருகிறது. இந்த நிலையில் இதுபோன்ற குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். எனவே, தூத்துக்குடியில் அசாதாரமான சூழ்நிலையை ஏற்படுத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
Related Tags :
Next Story