ரூ.32 கோடியில் 7 தடுப்பணைகள் கட்டும் பணி தொடக்கம் - எடப்பாடி பழனிசாமி தகவல்


ரூ.32 கோடியில் 7 தடுப்பணைகள் கட்டும் பணி தொடக்கம் - எடப்பாடி பழனிசாமி தகவல்
x
தினத்தந்தி 22 Jan 2019 4:30 AM IST (Updated: 22 Jan 2019 12:53 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் ரூ.32 கோடியில் 7 தடுப்பணைகள் கட்டும் பணி தொடங்கப்பட உள்ளதாக நெல்லையில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

நெல்லை,

நெல்லை டவுன் வாகையடி முனையில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, நெல்லை மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.2 ஆயிரத்து 537 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 3 லட்சத்து 41 ஆயிரம் பெண்கள் பயன் அடைந்துள்ளனர். விவசாயிகளுக்கு பயிர்க்கடனாக ரூ.139 கோடி வழங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் 2 லட்சத்து 96 ஆயிரம் விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். இலவச பசுக்கள் வழங்கும் திட்டத்தில், 4 ஆயிரத்து 200 ஏழை பெண்களுக்கு பசுக்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதற்காக ரூ.14 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் 2 லட்சத்து 38 ஆயிரத்து 375 பேருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டு உள்ளன.

நெல்லை மாவட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளில் நலத்திட்டங்களுக்கு ரூ.6 ஆயிரத்து 81 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் 15 லட்சத்து 66 ஆயிரத்து 67 பேர் பயன் அடைந்துள்ளனர். நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நடப்பாண்டில் 100 மருத்துவ இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதற்காக அரசு ரூ.120 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

தாமிரபரணி ஆறு- கருமேனியாறு-நம்பியாறு திட்டப்பணிகளை விரைந்து முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த கால்வாய் பணிக்காக இந்த ஆண்டு ரூ.216 கோடிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. அந்த பணி முடிவடைந்து விரைவில் தொடங்கப்பட உள்ளது. நெல்லை மாவட்டத்தில் ரூ.32 கோடியில் 7 தடுப்பணைகள் கட்ட டெண்டர் முடிந்து பணிகள் தொடங்கப்பட உள்ளன.

குடிமராமத்து திட்டம், வேளாண் கருவிகள் வாங்க மானியம், டிராக்டர் வாங்க மானியம், சொட்டுநீர் பாசன கருவிகள் வாங்க 75 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. நெடுஞ்சாலை துறையை பொறுத்த வரையில், நெல்லை மாவட்டத்தில் மட்டும் 1,636 கிலோ மீட்டர் சாலைகள் ரூ.903 கோடியில் பராமரிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர 2 வழிச்சாலை, 4 வழிச்சாலை, 6 வழிச்சாலை என்று போக்குவரத்துக்கு ஏற்றாற்போல் சாலைகள் விரிவுபடுத்தப்பட உள்ளன.

தூத்துக்குடி, திருச்செந்தூர், கன்னியாகுமரி சாலை பணிகள் 52.31 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபெற உள்ளது. இதுவரை 49 கிலோ மீட்டர் சாலை அமைக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது.

நெல்லை புறவழிச்சாலையை 4 வழிச்சாலையாக அகலப்படுத்தி மேம்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. நெல்லை சந்திப்பு புதிய பஸ்நிலையம் புதுப்பித்து கட்டப்பட்டு வருகிறது. சீதைக்குறிச்சி-ரஷ்டா சாலையில் சிற்றாற்றின் குறுக்கே ரூ.4 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு வருகிறது. செங்கோட்டை, பாவூர்சத்திரம், சுரண்டை சாலை பகுதியில் ரூ.4 கோடி செலவில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை அருகே சிவந்திபட்டி சாலையில் ரூ.26 கோடியே 30 லட்சம் செலவில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. மதுரை-கன்னியாகுமரி சாலையில் பழைய ஆற்றுப்பாலத்திற்கு இணையாக தாமிரபரணி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டப்படுகிறது. இதற்காக ரூ.16 கோடியே 50 லட்சத்துக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட உள்ளது.

நாங்குநேரி-ஏர்வாடி-வள்ளியூர்-விஜயாபதி சாலைக்கு பதிலாக, நாங்குநேரி-வள்ளியூர் ரெயில் நிலையத்திற்கு இடையே, ரெயில்வே மேம்பாலம் கட்டப்படுகிறது. இதற்காக ரூ.12 கோடியே 25 லட்சத்துக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி, பணிகள் தொடங்கப்பட உள்ளன.

தென்காசி-செங்கோட்டை ரெயில் நிலையத்திற்கு இடையே ரெயில்வே மேம்பாலம் ரூ.24 கோடியே 50 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டு உள்ளது. தேசிய நெடுஞ்சாலை அலகு 79 கிலோ மீட்டர் நீள சாலைகள் ரூ.68 கோடியே 50 லட்சம் செலவில் மேம்படுத்தப்பட்டு உள்ளன. மத்திய சாலை நிதி திட்டத்தின் கீழ் 101 கிலோ மீட்டர் நீள சாலைகள் ரூ.99 கோடி மதிப்பீட்டில் அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்டு உள்ளது. இதேபோல் நெல்லை மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் பேசினார். 

Next Story