விவசாயம் செழிக்க வேண்டி சிறுமியை நிலா பெண்ணாக பாவித்து வழிபாடு - வேடசந்தூர் அருகே வினோதம்


விவசாயம் செழிக்க வேண்டி சிறுமியை நிலா பெண்ணாக பாவித்து வழிபாடு - வேடசந்தூர் அருகே வினோதம்
x
தினத்தந்தி 22 Jan 2019 4:30 AM IST (Updated: 22 Jan 2019 1:04 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி, சிறுமியை நிலா பெண்ணாக பாவித்து வினோத வழிபாடு நடந்தது.

வேடசந்தூர்,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தேவிநாயக்கன்பட்டி கிராமம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை மாத பவுர்ணமி தினத்தையொட்டி சிறுமியை நிலா பெண்ணாக பாவித்து வினோத வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி இந்த திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

இதற்காக, ஒரு சிறுமியை நிலா பெண்ணாக தேர்வு செய்கின்றனர். ஒருமுறை தேர்வு செய்யப்பட்ட சிறுமி, 3 ஆண்டுகளுக்கு நிலா பெண்ணாக கருதப்படுவார். அதன்படி நிலா பெண்ணாக ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட சிறுமி கல்பனாதேவி, கடந்த வருடம் வரை நிலா பெண்ணாக இருந்தார். அதன்படி இந்த ஆண்டு புதிதாக நிலா பெண் தேர்வு நடந்தது.

இதையொட்டி கடந்த 7 தினங்களாக வயதுக்கு வராத 20-க்கும் மேற்பட்ட சிறுமிகள், அந்த கிராமத்தில் உள்ள மாசடச்சியம்மன் கோவிலுக்கு பால் கொண்டு வந்து நிலாவுக்கு படைத்தனர். மேலும் தினமும் மாலைநேரத்தில் தங்களது வீடுகளில் இருந்து வித, விதமான சாதங்களை கோவிலுக்கு கொண்டு வந்தனர்.

அந்த சாதங்களை ஒன்றாக சேர்த்து அதன் ஒரு பகுதியை கோவில் முன்பு நிலாவுக்கு படைத்தனர். பின்னர் அந்த சாதத்தில் விளக்கேற்றினர். மீதமுள்ள சாதத்தை சிறுமிகள் அனைவரும் பகிர்ந்து சாப்பிட்டனர். இதில், இரவு முழுவதும் தூங்காமல் இருந்த வயது குறைந்த சிறுமியை, நிலா பெண்ணாக ஊர்மக்கள் தேர்வு செய்தனர்.

அதன்படி இந்த ஆண்டு நிலா பெண்ணாக அதே ஊரை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகள் கனிஷ்கா (வயது 7) என்ற சிறுமி தேர்வு செய்யப்பட்டாள். இவள், மினுக்கம்பட்டியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

இதனையடுத்து நேற்று இரவு 8 மணிக்கு தேவிநாயக் கன்பட்டி கிராமத்தை சேர்ந்த பெண்கள், கனிஷ்காவை ஊர் எல்லையில் உள்ள சரளிமலைக்கு அழைத்து சென்று அங்கு அமர வைத்தனர். மேலும் ஆவாரம் பூக்களை பறித்து வந்து, அதனை மாலையாக தொடுத்து நிலா பெண்ணின் தலை, கழுத்து, கைகளில் அணிவித்து அலங்காரம் செய்தனர்.

பின்னர் ஒரு கூடை முழுவதும் ஆவாரம் பூக்களை வைத்து, அதை அந்த சிறுமியின் தலையில் வைத்தனர். பூக்கூடையுடன் சிறுமியை ஒரு கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக தேவிநாயக்கன்பட்டி கிராமத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு ஊர் மக்கள் சார்பில் ஊர் கொத்துக்காரர் (ஊர் முக்கியஸ்தர்) ஜெயக்குமார் தலைமையில் தாரை, தப்பட்டை முழங்க நிலா பெண்ணுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து சிறுமியை மகாமாரியம்மன் கோவிலில் தோழிகளுடன் அமர வைத்து, ஆண்களும், பெண்களும் கும்மியடித்து பாட்டுப்பாடி சுற்றி வந்தனர். பின்னர் மாசடச்சியம்மன் கோவிலுக்கு நிலா பெண் அழைத்து வரப்பட்டாள். அங்கு பச்சை மட்டையால் அந்த பெண்ணின் முறைப்பையன்கள் ஓலைக்குடிசை (வயதுக்கு வந்த பெண்களுக்கு சடங்கு செய்வது போல) அமைத்து, சிறுமி அமர வைக்கப்பட்டு சடங்குகள் செய்தனர். அதனைத்தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்தனர்.

பின்னர் குடிசையில் இருந்து சிறுமியை வெளியேற்றி கோவில் முன்பு அழைத்து வந்தனர். மாவிளக்கு ஏற்றி, அதன் நடுவே சிறுமியை அமர வைத்து பெண்கள் கும்மி அடித்து பாடினர். அதனைத்தொடர்ந்து கிராம மக்கள் அந்த சிறுமியை அழைத்துக்கொண்டு, ஊர் எல்லையில் உள்ள கிணற்று தண்ணீரில் கூடையில் வைத்திருந்த ஆவாரம் பூக்களை கவிழ்த்தனர்.

அப்போது, பந்துபோல் நீரில் மிதந்த ஆவாரம் பூக்கள் மீது, மண் கலயத்தில் எண்ணெய் ஊற்றி அதில் திரி வைத்து நிலா பெண் விளக்கு ஏற்றியவுடன் கிராம மக்கள் ஊர் திரும்பினர். அந்த விளக்கு, 7 நாட்கள் அணையாமல் எரிந்துகொண்டே இருக்கும் என்று கூறப்படுகிறது. மழை பெய்து ஊர் செழிக்க வேண்டும் என்பதற்காகவும், உலகம் அமைதி பெறவேண்டும் என்பதற்காகவும் 100 ஆண்டுகளுக்கும் மேலாக கிராம மக்கள் இந்த வினோத திருவிழாவை நடத்தி வருகின்றனர்.

நிலா பெண்ணாக பாவிக்கப்படுகிற சிறுமிகள், திருமணம் செய்து நல்ல முறையில் பெயரும் புகழும் பெற்று வாழ்க்கையில் உயர்ந்து விளங்குவார்கள் என்பது ஐதீகம் ஆகும். 

Next Story