ஈரோடு பெரியசேமூரில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை


ஈரோடு பெரியசேமூரில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 21 Jan 2019 10:15 PM GMT (Updated: 21 Jan 2019 8:44 PM GMT)

ஈரோடு பெரியசேமூரில் அமைக்கப்படும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

ஈரோடு,

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

பெரியசேமூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறிஇருந்ததாவது:–

பெரியசேமூர், எலந்தகாடு, கல்லாங்கரடு, எல்.வி.ஆர்.காலனி, அம்மன்நகர், கன்னிமார்நகர், சின்னக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் சுடுகாட்டுக்காக ஒதுக்கப்பட்டு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்ட இடத்தில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்தும், எரித்தும் வருகிறோம். இந்த நிலையில் அங்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இதனால் நாங்கள் சுடுகாட்டை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை இடமாற்றம் செய்யவும், ஏற்கனவே உள்ள சுடுகாட்டு பகுதியில் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.

பவானி அருகே மைலம்பாடியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறிஇருந்ததாவது:–

சித்தோடு கோணவாய்க்கால் பிரிவு பகுதியில் செயல்பட்ட டாஸ்மாக் கடையை பவானி அருகே மைலம்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட போத்தநாயக்கன்புதூரில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக ஏற்கனவே கோரிக்கை மனு கொடுக்கப்பட்டதின் பேரில் கடை அமைக்கும் பணி தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் டாஸ்மாக் கடையை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் போத்தநாயக்கன்புதூர், போத்தநாயக்கனூர், அருமைக்காரன்புதூர், கல்வாநாயக்கனூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும். அருகில் அரசு தொடக்க பள்ளிக்கூடமும், மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கமும் செயல்பட்டு வருகின்றன. எனவே பொதுமக்களின் நலன்கருதி டாஸ்மாக் கடை அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.

ஈரோடு ஆர்.என்.புதூர் மாதேஸ்வர் நகரை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், ‘‘எங்கள் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. அங்கன்வாடி மையத்தில் 30–க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். அங்கு குழந்தைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. எனவே அங்கன்வாடி மையத்துக்கு சொந்த கட்டிடம் கட்ட வேண்டும். இதேபோல் வாடகை கட்டிடத்தில் செயல்படும் ரே‌ஷன் கடைக்கும் சொந்த கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’’, என்று கூறப்பட்டு இருந்தது.

அம்மாபேட்டை அருகே ஊமாரெட்டியூர் அந்தோணிபுரத்தை சேர்ந்த பூங்கொடி (வயது 24) என்பவர் கொடுத்த மனுவில், ‘‘எங்கள் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் கடந்த 2015–ம் ஆண்டு சேர்ந்தேன். குடும்ப சூழ்நிலை காரணமாக எனது படிப்பை தொடர முடியவில்லை. எனது பட்டப்படிப்பு சான்றிதழ், மாற்று சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியன கல்லூரியில் உள்ளன. இந்த சான்றிதழை கல்லூரி நிர்வாகத்தினர் தர மறுக்கின்றனர். எனது சான்றிதழை பெற்றுத்தர வேண்டும்’’, என்று கூறப்பட்டு இருந்தது.

ஈரோடு கருங்கல்பாளையம் சுப்பையன் வீதியை சேர்ந்த வெங்கடேசின் மனைவி புவனேஸ்வரி என்பவர் தனது கைக்குழந்தையுடன் வந்து கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில், ‘‘எனது கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் என்னை வீட்டில் இருந்து துரத்திவிட்டனர். அவர் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். எனது கணவருடன் என்னை சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நான் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். என்னை கருணை கொலை செய்ய அனுமதியுங்கள்’’, என்று கூறப்பட்டு இருந்தது.

தந்தை பெரியார் தொழிற்சங்க பேரவை சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:–

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஈரோடு மண்டல பொது மேலாளர் தனது பதவியை தவறாக பயன்படுத்தி வருகிறார். தொழிலாளர்கள் மீது தவறான குற்றச்சாட்டுகளை கூறி பணியிடை நீக்கம் செய்து உள்ளார். இதனால் ஏராளமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே தொழிலாளர் விரோத போக்கை கடைபிடித்து வரும் பொது மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

ஈரோடு வீரப்பன்சத்திரம் பெரியகட்டை தெருவை சேர்ந்த பழனிவேலின் மனைவி மாலதி (30) என்பவர் கோவில் மணியுடன் வந்து கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர், ‘‘வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த கோவிலில் மணி கொடுக்க நான் வேண்டி இருந்தேன். எனது வேண்டுதலை நிறைவேற்ற கோவிலுக்கு புதிய மணியை வாங்கி கொடுத்தேன். ஆனால் அந்த மணியை ஏற்க கோவில் நிர்வாகத்தினர் மறுக்கின்றனர். எனவே கோவிலில் மணியை பெற்றுக்கொள்ள அனுமதிக்க வேண்டும்’’, என்று கூறிஇருந்தார்.

இந்து மக்கள் கட்சியினர் கையில் ஆட்டுக்குட்டியுடன் வந்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், ‘‘தமிழகத்தில் தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டும். வள்ளலார் ஜோதியான இந்த நாளில் மதுக்கடைகளுக்கும், கறிக்கடைகளுக்கும் விடுமுறை கொடுக்க வேண்டும். மேலும், வள்ளலாரின் வடலூரை ஆன்மிக புனித நகரமாக அறிவிக்க வேண்டும்’’, என்று கூறப்பட்டு இருந்தது. இதேபோல் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் மொத்தம் 217 மனுக்களை கொடுத்தனர்.

கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் ஆர்.பி.பிரபாவதி, மாவட்ட வழங்கல் அதிகாரி ஜெயராமன் உள்பட அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Next Story