குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் ஆழ்குழாய் கிணறு மூலம் தண்ணீர் எடுக்க பொதுமக்கள் எதிர்ப்பு அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு


குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் ஆழ்குழாய் கிணறு மூலம் தண்ணீர் எடுக்க பொதுமக்கள் எதிர்ப்பு அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 21 Jan 2019 10:30 PM GMT (Updated: 21 Jan 2019 8:44 PM GMT)

குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் ஆழ்குழாய் கிணறு மூலம் தண்ணீர் எடுத்து செல்ல பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

டி.என்.பாளையம்,

கோபி அருகே குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் உள்ள தனது பட்டா நிலத்தில் கொங்கர்பாளையத்தை சேர்ந்த ஒருவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆழ்குழாய் கிணறு அமைத்தார். பின்னர் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தனது விவசாய நிலத்துக்கு பாசனத்துக்காக தண்ணீர் கொண்டு செல்ல அங்கு ராட்சத குழாய்கள் பதித்தார்.

இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். குழாய் பதிக்கும் பணி நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் அந்த நபர் கோர்ட்டு உத்தரவுடன் குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் ராட்சத குழாய் பதிக்க நேற்று காலை பொக்லைன் எந்திரத்துடன் அங்கு சென்றார். அவருடன் போலீசாரும் சென்றனர்.

இதை அறிந்த வினோபா நகர் பொதுமக்கள் மற்றும் பள்ளிக்கூட மாணவ–மாணவிகள் 200–க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். பின்னர் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோபி தாசில்தார் வெங்கடேஸ்வரன், பங்களாப்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு சென்றனர்.

அப்போது பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டனர். அவர்களிடம் பொதுமக்கள் கூறும்போது, ‘குண்டேரிப்பள்ளம் அணையில் தண்ணீர் நிரம்பி இருப்பதால் அதை ஓட்டிய பகுதிகளில் உள்ள கிணறுகளின் நீர்மட்டம் உயரும். அதனால் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது. ஆழ்குழாய் கிணறு அமைத்து ராட்சத குழாய் மூலம் தண்ணீர் கொண்டு சென்றால் குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காது. மேலும் அணையில் உள்ள தண்ணீரின் அளவு குறைந்துவிடும். எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

அதற்கு அதிகாரிகள், ‘குழாய் பதிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது’ என்றனர். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story