நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தை திருவிழா தேரோட்டம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்


நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தை திருவிழா தேரோட்டம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
x
தினத்தந்தி 22 Jan 2019 4:00 AM IST (Updated: 22 Jan 2019 2:29 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தை திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் நாகர்கோவில் நாகராஜா கோவிலும் ஒன்று. நாகதோஷ பரிகார தலங்களில் இந்த கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் தை திருவிழா ஆண்டு தோறும் 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான தை திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையில் சிறப்பு அபிஷேகம், வழிபாடு, சுவாமி வாகனத்தில் எழுந்தருளல், மாலையில் சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, சொல்லரங்கம் போன்றவை நடைபெற்று வந்தன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. காலை 9 மணிக்கு நடந்த தேரோட்டத்தை, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், குமரி மாவட்ட நீதிபதி கருப்பையா, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜன், மாவட்ட பால்வள தலைவர் எஸ்.ஏ.அசோகன் ஆகியோர் தேர் வடம் தொட்டு இழுத்து தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் நாகர்கோவில் நகரசபை முன்னாள் தலைவர் மீனாதேவ், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, கண்காணிப்பாளர் ஜீவானந்தம், அறநிலையத்துறை மராமத்து என்ஜினீயர் ராஜ்குமார், நாகராஜா கோவில் மேலாளர் ரமேஷ், அ.தி.மு.க. இலக்கிய அணி மாவட்ட தலைவர் நாஞ்சில் சந்திரன் மற்றும் அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தெற்குரதவீதி, மேற்கு ரதவீதி, வடக்கு ரதவீதி வழியாக, பெருந்திரளான பக்தர்கள் வெள்ளத்தில் பவனி வந்த தேர் மதியம் 2 மணிக்கு கிழக்கு ரதவீதியில் உள்ள நிலையை அடைந்தது. தேரோட்டத்தின் போது பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமியை தரிசனம் செய்தனர். தேரோட்டத்தையொட்டி கோவில் கலையரங்க மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு ஆன்மிக சொற்பொழிவு, 8.15 மணிக்கு இசை பட்டிமன்றம், 9.30 மணிக்கு சப்தாவர்ணம் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது.

10-ம் நாள் திருவிழாவான இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4.15 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 5 மணிக்கு சுவாமி ஆறாட்டுக்கு எழுந்தருளல், மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு ஆன்மிக சொற்பொழிவு, 8.15 மணிக்கு நகைச்சுவை சிந்தனை பட்டிமன்றம், 9.30 மணிக்கு ஆறாட்டுத்துறையில் இருந்து சுவாமி கோவிலுக்கு எழுந்தருளல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

நாகராஜா கோவில் தேரோட்டத்தையொட்டி நேற்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பம், குடும்பமாக வந்து தேரோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Next Story