கிராமங்களில் 1½ லட்சம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் மத்திய மந்திரி பேச்சு


கிராமங்களில் 1½ லட்சம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் மத்திய மந்திரி பேச்சு
x
தினத்தந்தி 21 Jan 2019 10:45 PM GMT (Updated: 21 Jan 2019 9:11 PM GMT)

கிராமங்களில் 1½ லட்சம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய மந்திரி அஸ்வினி குமார் சவுபே கூறினார்.

அருமனை,

அருமனை வட்டார இந்து சமுதாயம் மற்றும் ஆலயகமிட்டி சார்பில் பொங்கல் விழா அருமனையில் நடந்தது. இதையொட்டி கலாசார ஊர்வலம், பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு விழாக்குழு தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் விஜயகுமார் வரவேற்று பேசினார். விழாவில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி அஸ்வினி குமார் சவுபே கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

விவசாயத்தையும், விவசாயிகளையும், விவசாயத்திற்கு துணை நிற்கும் விலங்குகளையும், சூரியனையும் மதிக்கும் விழாவாக பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. 2022-ம் ஆண்டில் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் வகையில் மத்திய அரசு திட்டம் தீட்டியுள்ளது.

நாட்டில் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ‘தூய்மை பாரதம், தூய்மை தேசம்’ என்ற தாரக மந்திரத்துடன் கடுமையாக உழைத்து வருகிறோம்.

ஏழைகள், விவசாயிகள், சாதாரண மக்களின் மருத்துவ வசதிக்காக மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சத்திற்கான மருத்துவ உதவி கிடைக்கும். காப்பீடு திட்டம் மூலம் இதுவரை 8 லட்சத்து 87 ஆயிரத்து 500 பேர் பயனடைந்துள்ளனர்.

இந்தியா முழுவதும் கிராமங்களில் 1½ லட்சம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதன் ஆரம்பகட்டமாக இதுவரை 15 ஆயிரம் மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.1,100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மேலும் 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் குருசிவ சந்திரன், பெருங்குளம் செங்கோல் ஆதீனம் சிவபிரகாச தேசீக ஆச்சாரியர், பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் கேசவ விநாயகன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில் மதன் நன்றி கூறினார். 

Next Story