மின்வாரியத்தில் பணி நிரந்தரம் செய்யக்கோரி ஒப்பந்த பணியாளர்கள் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு தர்ணா


மின்வாரியத்தில் பணி நிரந்தரம் செய்யக்கோரி ஒப்பந்த பணியாளர்கள் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு தர்ணா
x
தினத்தந்தி 21 Jan 2019 10:15 PM GMT (Updated: 21 Jan 2019 9:39 PM GMT)

மின்வாரியத்தில் பணி நிரந்தரம் செய்யக்கோரி ஒப்பந்த பணியாளர்கள் வாயில் கருப்புத்துணி கட்டிக்கொண்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். அந்த வகையில், திருப்பூர் மாவட்ட அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் முன்னேற்ற சங்க சார்பில் நேற்று மனுகொடுப்பதற்காக ஏராளமானோர் வந்தனர். அவர்கள் தங்கள் வாய்களில் கருப்பு துணிகளை கட்டிக்கொண்டு திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் கலெக்டரிடம் சென்று மனு ஒன்றை கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

திருப்பூர் மின்பகிர்மான வட்டத்தில் உள்ள அவினாசி மற்றும் திருப்பூர் கோட்டத்தில் 250–க்கும் மேற்பட்ட மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதில் 81 பேருக்கு பணி நிரந்தரம் செய்வது தொடர்பாக கோர்ட்டு ஆணை வெளியிட்டும் இதுவரை அதை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. பல முறை இதுதொடர்பாக மனுகொடுத்தும் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் உடனடியாக ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய பரிந்துரை செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பல்லடம் தாலுகா நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:–

பொதுமக்களிடம் அயோடின் பற்றாக்குறையை போக்கும் விதமாக அயோடின் கலந்த உப்பை அரசு விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் அயோடின் கலக்காத உப்புகள் வெவ்வேறு பெயர்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் அயோடின் உப்பு குறித்து ஆய்வு செய்தத்தில் தற்போது 40 சதவீதம் வரை அயோடின் கலக்காத, தரமன்ற உப்பு விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு வருகிற குடியரசு தினத்தன்று நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் அயோடின் உப்பின் அவசியம், அயோடின் குறைப்பாட்டால் உடல் நலனுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து தெரிவிக்க வேண்டும். மேலும், அனைத்து ரே‌ஷன் கடைகளிலும் அயோடின் மற்றும் இரும்பு சத்து கலந்த அரசு அம்மா உப்பு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story