கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெண் தர்ணா


கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெண் தர்ணா
x
தினத்தந்தி 22 Jan 2019 4:30 AM IST (Updated: 22 Jan 2019 3:11 AM IST)
t-max-icont-min-icon

கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி 3 குழந்தைகளுடன் பெண் ஒருவர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தாராபுரம் ரோடு கே.செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சாந்தி என்ற பெண், 3 குழந்தைகளுடன் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார்.

பின்னர், கணவருடன் தன்னை சேர்த்து வைக்கக்கோரி, கலெக்டர் அலுவலக வளாகத்தில் தனது குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து அவர் தர்ணாவில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து கலெக்டரை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:–

கடந்த 2008–ம் ஆண்டு அழகுராஜா என்பவருடன் எனக்கு திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு 2 பெண் குழந்தைகளும், 1 ஆண் குழந்தையும் உள்ளனர். எனது கணவர் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் குடும்ப நல ஆலோசகராக பணியாற்றி வந்தார். அப்போது அங்கு உடன் வேலை பார்த்த ஒரு பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகியதை தொடர்ந்து எனது கணவர் என்னை விட்டு விட்டு, அந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

இதனால் நானும், எனது குழந்தைகளும் தனிமையில் இருப்பதுடன், வறுமையில் வாடி வருகிறோம். எனது 3 குழந்தைகளையும் வளர்க்க முடியாத சூழல் உள்ளது. இதனால் அழகுராஜா மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதுடன், என்னை அவருடன் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story