விருதுநகர் மாவட்டத்துக்கு பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை முதல்–அமைச்சர் தந்துள்ளார் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு
விருதுநகர் மாவட்ட வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை முதல்–அமைச்சர் தந்துள்ளதாக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி
சிவகாசி,
தமிழக அரசின் கால்நடைத்துறை சார்பில் ஊரக புழக்கடை கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் 200 பயனாளிகளுக்கு தலா 40 கோழிக்குஞ்சு வழங்கும் நிகழ்ச்சி சிவகாசி அருகே உள்ள தேவர்குளம் பஞ்சாயத்தில் நடைபெற்றது. சிவகாசி ஆர்.டி.ஓ. தினகரன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். கால்நடைத்துறை அதிகாரி பார்த்தசாரதி மல்லையா வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பயனாளிகளுக்கு கோழிக் குஞ்சுகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:–
ஏழை மக்களின் நலனுக்காக அ.தி.மு.க. தொடங்கப்பட்டது. அதனால் தான் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சிக் காலங்களில் ஏழைகளுக்காக பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அந்த திட்டங்கள் தற்போது வரை தொடர்கின்றன. எடப்பாடி பழனிசாமி முதல்–அமைச்சராக பொறுப்பு ஏற்றது முதல் நமது மாவட்ட வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை நாம் கேட்டு பெற்றுள்ளோம்.
அனைத்து திட்டங்களையும் நமக்கு தந்து அந்த திட்டங்களை செயல்படுத்த போதிய நிதியையும் ஒதுக்கி வருகிறார். மாவட்டம் முழுவதும் சாலைகள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் பாலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது நமது மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களை கணக்கெடுத்து அவர்களின் வாழ்கை தரம் உயர கோழிக்குஞ்சுகள் வழங்கப்படுகிறது.
இதன் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் 21 ஆயிரம் பயனாளிகள் பயன் பெறுவார்கள். பட்டாசு தொழிலை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் நல்ல தீர்ப்பு வரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் தாசில்தார் பரமானந்தராஜா, அ.தி.மு.க. பிரமுகர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, வேண்டுராயபுரம் காளிமுத்து, மச்சக்காளை, ரிசர்வ்லைன் கருப்பு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கால்நடைத்துறை அதிகாரி சஞ்சீவிராஜ் நன்றி கூறினார்.