யாகம் நடத்தினால் முதல்–அமைச்சர் ஆகலாம் என ஸ்டாலின் நம்புகிறாரா? ஓ.பன்னீர்செல்வம் கேள்வி


யாகம் நடத்தினால் முதல்–அமைச்சர் ஆகலாம் என ஸ்டாலின் நம்புகிறாரா? ஓ.பன்னீர்செல்வம் கேள்வி
x
தினத்தந்தி 21 Jan 2019 11:00 PM GMT (Updated: 21 Jan 2019 10:20 PM GMT)

“யாகம் நடத்தினால் முதல்–அமைச்சர் ஆகலாம் என ஸ்டாலின் நம்புகிறாரா?“ என மதுரையில் அளித்த பேட்டியில் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார்.

மதுரை,

தலைமை செயலகத்தில் துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறையில் சிறப்பு யாகம் நடத்தியதாகவும், முதல்–அமைச்சர் பதவியை கைப்பற்றவே இந்த யாகத்தை நடத்தியதாகவும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

இந்தநிலையில், சென்னை செல்வதற்காக துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

தலைமை செயலகத்தில் உள்ள எனது அறையில் சாமி கும்பிடுவது வழக்கம். அதுபோல் அன்றைய தினமும் சாமி கும்பிட்டேன். மேலும், எனது அறையில் ஜன்னல் மரக்கட்டையில் கரையான் அரித்திருந்தது. அதில் ஏற்பட்ட பழுதையும் நீக்கி வழக்கமாக நடத்தப்படும் பூஜையை நடத்தினோம். மு.க.ஸ்டாலின் கூறுவது போல், யாகம் நடத்தவில்லை. யாகம் நடத்தினால் முதல்–அமைச்சர் ஆகிவிட முடியும் என்றால், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் யாகம் நடத்தி முதல்–அமைச்சர் ஆகிவிடலாமே.

யாகம் நடத்தினால் முதல்–அமைச்சர் ஆகிவிட முடியும் என மு.க.ஸ்டாலின் நம்புகிறாரா? மூட நம்பிக்கைக்கு புது அர்த்தம் கண்டுபிடிப்பது தேவையற்றது. அவர் என்ன செய்வது என தெரியாமல் குழம்பிப் போய் இருக்கிறார். அரசியல் லாபத்திற்காக எந்த பக்கம் வேண்டுமானாலும் தாவலாம் என்ற மனநிலையில் இருக்கிறார்.

எங்களுக்கு எதிராக எவ்வளவு பெரிய கூட்டணி அமைந்தாலும் அதனை எதிர்கொள்ள மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழங்கிய பயிற்சிகளும், திட்டங்களும் இருக்கிறது. அதன் மூலம் மகத்தான வெற்றியை பெறுவோம். மக்கள் எங்களுக்கு எப்போதும் ஆதரவு தருவார்கள். தம்பிதுரை அவரது மனதில் பட்டதை பேசி வருகிறார். அதனை அரசியலாக்க வேண்டாம்.

கட்சியில் உள்ள ஒருவரை முதல்–அமைச்சராக்கிய பெருமை அ.தி.மு.க.விற்கு மட்டுமே உள்ளது. தி.மு.க. தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு, அவரது கட்சியில் உள்ள இன்னொருவரை முதல்–அமைச்சராக்கும் துணிவு, தெம்பு கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story