90 ஆண்டுகள் பழமை வாய்ந்த சேலம் நாட்டாண்மை கழக கட்டிடத்தை தொன்மை மாறாமல் புதுப்பிக்க ஆய்வு


90 ஆண்டுகள் பழமை வாய்ந்த சேலம் நாட்டாண்மை கழக கட்டிடத்தை தொன்மை மாறாமல் புதுப்பிக்க ஆய்வு
x
தினத்தந்தி 22 Jan 2019 4:14 AM IST (Updated: 22 Jan 2019 4:14 AM IST)
t-max-icont-min-icon

90 ஆண்டுகள் பழமை வாய்ந்த சேலம் நாட்டாண்மை கழக கட்டிடத்தை தொன்மை மாறாமல் புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சேலம்,

சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பழைய நாட்டாண்மை கழக கட்டிடத்தில் மாவட்ட ஊராட்சி அலுவலகம் 1927–ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தில் நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம், பால்வளம் துணை பதிவாளர் அலுவலகமும், அமைப்பு சாரா தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம், சேலம் மாவட்ட பள்ளி சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன சங்கம் ஆகியவையும் செயல்பட்டு வருகிறது. இந்த பழைய நாட்டாண்மை கழக கட்டிடம் கட்டப்பட்டு கிட்டத்தட்ட 90 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால் அதனை தொன்மை மாறாமல் புதுப்பிக்கவும், ஜன்னல், கதவு உள்ளிட்டவைகளை அழகுப்படுத்தவும் ஊரக வளர்ச்சித்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி பழைய நாட்டாண்மை கழக கட்டிடத்தை புதுப்பிக்க எவ்வளவு செலவு ஆகும் என்பது பற்றி திட்ட மதிப்பீடு தயாரிக்க நேற்று ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளால் ஆளில்லா குட்டி விமானம் (ஹெலி கேமரா) மூலம் வீடியோ படம் எடுக்கப்பட்டது. மேலும், கட்டிடத்தின் பல்வேறு பகுதிகளையும் அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 90 ஆண்டுகளை கடந்தாலும் இன்னும் நாட்டாண்மை கழக கட்டிடத்தின் தன்மை உறுதிப்பட இருப்பதாகவும், இதனால் கட்டிடங்களை இடிக்காமலும், அதன் தொன்மை மாறாமலும் புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

இதுகுறித்து ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் கூறியதாவது:–

சேலத்தில் உள்ள பழைய நாட்டாண்மை கழக கட்டிடத்தில் ஏற்கனவே கலெக்டர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. அதன்பிறகு புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டது. இதனால் அந்த கட்டிடத்தில் மாவட்ட ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. 90 ஆண்டுகளை கடந்துவிட்டாலும் அதன் தொன்மை மாறாமல் புதுப்பிக்கப்படுகிறது. அதாவது, கட்டிடத்திற்கு வர்ணம் பூசுதல், ஜன்னல், கதவுகளுக்கு பெயிண்டு அடித்தல், அறைகளை நவீன மாடல்களில் அழகுப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெறும். தற்போது கட்டிடம் முழுவதும் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து அதுபற்றிய விவரத்தை ஊரக வளர்ச்சித்துறைக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பிறகு தேவையான நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story