சேலம் கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு


சேலம் கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 22 Jan 2019 4:16 AM IST (Updated: 22 Jan 2019 4:16 AM IST)
t-max-icont-min-icon

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்,

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கினார். சேலம் மாவட்டம் இடங்கணசாலை அருகே உள்ள தூதனூர், நாப்பாளையம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 100–க்கும் மேற்பட்ட மக்கள் காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் போலீசார் அவர்களிடம், 5 பேர் மட்டும் உள்ளே சென்று கலெக்டரை சந்தித்து மனு கொடுக்குமாறு கூறினர். இதற்கு அவர்கள் குடிநீர் பிரச்சினை என்பதால் அனைவரும் சென்று தான் மனு கொடுப்போம் என்று தெரிவித்தனர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார் அறிவுரையின் பேரில் ஒருசிலர் மட்டும் கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்று கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:–

எங்கள் பகுதிகளில் உள்ள 3 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு இருப்பாளி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சில அதிகாரிகள் அனுமதியுடன் தண்ணீர் வரும் மெயின் குழாய்களில் 50–க்கும் மேற்பட்டவர்கள் சட்டவிரோதமாக குடிநீர் இணைப்பு பெற்று பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் எங்கள் பகுதிகளில் கடந்த 6 மாதங்களாக குடிநீர் கிடைக்காமல் மிகவும் சிரமம் அடைந்து வருகிறோம். பொது கிணற்றிலும் தண்ணீர் இல்லாததால் 4 கிலோ மீட்டர் தூரம் சென்று குடிநீர் பிடித்து வருகிறோம். எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு விரைவில் சட்ட விரோத இணைப்புகளை துண்டித்து நடவடிக்கை எடுத்து அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story