ஒளிபரப்பு திடீர் நிறுத்தம்: அரசு கேபிள் டி.வி. நிறுவன அலுவலகத்தை ஆபரேட்டர்கள் முற்றுகை
ஒளிபரப்பு திடீரென நிறுத்தப்பட்டதால் விழுப்புரத்தில் உள்ள அரசு கேபிள் டி.வி. நிறுவன அலுவலகத்தை ஆபரேட்டர்கள் முற்றுகையிட்டனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் 70,390 வீடுகளுக்கு அரசு கேபிள் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் மாதந்தோறும் ரூ.175, ரூ.125 என 2 ‘பேக்’குகள் உள்ளது. இதன் அடிப்படையில் செட்டாப் பாக்ஸ் வழங்கப்பட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் பல இடங்களில் திடீரென ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட கேபிள் டி.வி. ஆபரேட்டர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் நேற்று காலை, விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவன அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையிலான போலீசார், அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கேபிள் டி.வி. ஆபரேட்டர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச்செய்தனர்.
அதன் பின்னர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் கூறுகையில், 2 விதமான ‘பேக்’குகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்படும் தொகையில் அரசுக்கு ரூ.88, ரூ.74 வீதம் செலுத்தப்பட்டு வருகிறது. முன்பெல்லாம் ஒரு மாதத்திற்கான சந்தா தொகையை அந்த மாதம் முடிவடைந்ததும் வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலித்து அடுத்த மாதம் செலுத்தி வந்தோம்.
தற்போது ஒரு மாதத்திற்கான தொகையை அந்த மாதமே செலுத்த வேண்டும் என்று நிர்பந்திக்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே சந்தா தொகையை கொடுக்க மாட்டார்கள். இதனால் இம்மாத தொகையை நாங்கள் செலுத்தாததால் ஒளிபரப்பை தடை செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் என்றனர்.
இதுகுறித்து கேபிள் டி.வி. தாசில்தார் அலுவலக அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறுகையில், முன்பெல்லாம் ‘போஸ்ட் பெய்டு’ முறை இருந்தது. தற்போது இம்மாதம் முதல் ‘பிரீபெய்டு’ முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நாங்கள் ஏற்கனவே கேபிள் டி.வி. ஆபரேட்டர்களிடம் தெரிவித்து விட்டோம். அவர்கள் உடனடியாக ‘பிரீபெய்டு’ முறையை கடைபிடிக்க வேண்டும். மேலும் விரும்பிய சேனலை பார்க்கும் வகையில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இன்னமும் 28,800 செட்டாப் பாக்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.
இந்த திடீர் போராட்டத்தினால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.