குடியரசு தின விழா ஏற்பாடுகள் தீவிரம் அணிவகுப்பு ஒத்திகை நடந்தது
புதுவை உப்பளம் மைதானத்தில் வருகிற 26–ந் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் ஒரு பகுதியாக அணிவகுப்பு ஒத்திகை நேற்று நடந்தது.
புதுச்சேரி,
குடியரசு தினவிழா வருகிற 26–ந்தேதி புதுவை உப்பளம் இந்திராகாந்தி மைதானத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி குடியரசு தின விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
விழாவுக்கு வருபவர்கள் அமர பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணியும் தொடங்கியுள்ளது. காலை மற்றும் மாலை வேளைகளில் போலீசார் மற்றும் மாணவ, மாணவிகள், என்.சி.சி., என்.எஸ்.எஸ். வீரர்கள் அணி வகுப்பு ஒத்திகையிலும் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் விழாவில் விருதுபெறுபவர்களை தேர்வு செய்யும் பணியும் நடந்து வருகிறது.
இந்தநிலையில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், எனவே நாடு முழுவதும் உஷார் நிலையில் இருக்க வேண்டும். அந்தந்த மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதைத்தொடர்ந்து புதுச்சேரியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. போலீசார் விழிப்புடன் இருக்குமாறு டி.ஜி.பி. சுந்தரி நந்தா அறிவுறுத்தி உள்ளார்.
இதன் காரணமாக போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாகன சோதனைகளும் நடந்து வருகின்றன. வெளியூர்களில் இருந்து புதுச்சேரி வருபவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் சுற்றுலா தலங்களிலும் கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமியை போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா நேற்று சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் இருவரும் குடியரசு தின விழாவில் விருது பெறும் போலீசாரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக ஆலோசித்தனர். மேலும் போலீசாருக்கு 13–வது மாத சம்பளம் (விடுமுறையில் பணிபுரிவதற்கானது) வழங்குவது தொடர்பாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகள், சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்தும் அவர்கள் ஆலோசித்ததாக தெரிகிறது.