விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தயாரிக்க வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு
விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தயாரிக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் மனு அளித்தனர்.
கோவை,
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற் றது. இதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி துரை ரவிச்சந்திரன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். கூட்டத்தில் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு, முதியோர் உதவித்தொகை, புதிய ரேஷன் கார்டு, சாலை வசதி, இலவச வீட்டு மனைப்பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனர். கூட்டத்தில் கொடுக்கப்பட்ட மனுக்கள் விவரம் வருமாறு:-
தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி தலைமையில் விவசாயிகள் நேற்று தைப்பூசம் என்பதால் கைகளில் வேல்களுடன் கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்டத்தில் அதிக பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் போதிய வருமானம் இல்லை. இதனால் விவசாயிகள் நஷ்டம் அடைந்து உள்ளனர். இதன் காரணமாக அவர்கள் வங்கியில் வாங்கிய கடன்களை திரும்ப செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற கடன்கள் அனைத் தையும் பாரபட்சம் இல்லாமல் தள்ளுபடி செய்ய வேண்டும். அடுத்த மாதம் (பிப்ரவரி) கூடும் நாடாளுமன்ற கூட்ட தொடரில் விவசாயத்திற்காக தனி பட்ஜெட் தயாரிக்க வேண்டும். விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கவும், விளைபொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்யவும், மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சுந்தராபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த நிதி நிறுவனத்தில் குனியமுத்தூர், மலுமிச்சம்பட்டி, போத்த னூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஏலச்சீட்டில் பணம் செலுத்தினர். பொதுமக்களிடம் இருந்து ரூ.1 கோடிக்கும் மேல் பணத்தை பெற்றுக்கொண்டனர். ஆனால் சீட்டு முடிந்து 6 மாதங்கள் ஆகியும் பணத்தை திருப்பி தரவில்லை. தற்போது அந்த நிதி நிறுவன அலுவலகம் பூட்டியே கிடக்கிறது. அந்த நிதி நிறுவனத்தின் உரிமையாளர்களையும் தொடர்பு கொள்ள முடிய வில்லை. எனவே எங்களின் பணத்தை திரும்ப பெற்றுத்தரவும், மோசடி செய்த நிதி நிறுவன உரிமையாளர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த இம்மானுவேல் (வயது 27) என்பவர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நான் கோவையை சேர்ந்த கல்லூரி மாணவியை காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டேன். திருமணமான ஒரு மாதத்திலேயே எனது மனைவி என்னை விட்டு பிரிந்து தனது தாய் வீட்டிற்கு சென்றார். கர்ப்பிணியாக இருந்த அவர் தனது பெற்றோரின் தூண்டுதலால் கருவை கலைத்து விட்டார். நாங்கள் திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட போட்டோவை எனது மனைவியின் செல்போனில் பதிவு செய்து வைத்து இருந்தேன். அதை எனது மனைவியின் தந்தை அழித்து விட்டார்.
இந்தநிலையில், நான் எனது மனைவியின் வீட்டிற்கு சென்று குடும்பம் நடத்த வருமாறு அழைத்தேன். ஆனால் அவர் என்னுடன் வர மறுத்துவிட்டார். அப்போது எனது மனைவி, அவருடைய தந்தை, உறவினர்கள் சேர்ந்து என்னை சரமாரியாக தாக்கினார்கள். இது தொடர்பாக துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தேன்.
மேலும் போலீஸ் ஐ.ஜி., டி.ஐ.ஜி., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் புகார் அளித்தேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே என்னை தாக்கிய மனைவி, அவரின் தந்தை மற்றும் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story