குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையே ரெயில் தண்டவாளத்தில் பிளாஸ்டிக் கழிவுகள்
குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையே ரெயில் தண்டவாளத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் கிடக்கின்றன. சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
குன்னூர்,
நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பே தடை விதிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு உள்ளது. சமவெளி பகுதிகளில் கடந்த 1-ந் தேதி பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
குன்னூர்- மேட்டுப்பாளையம் ரெயில் பாதையில் அடர்லி முதல் ரன்னிமேடு வரை தண்டவாளத்தின் ஓரத்தில் பிளாஸ்டிக் பைகள் குவிந்து கிடக்கின்றன. ரெயிலில் செல்லும் சுற்றுலா பயணிகள் தின்பண்டங்கள் மற்றும் உணவு பொருட்களை சாப்பிட்டுவிட்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வெளியே வீசுகிறார்கள். இவை காற்றில் பறந்து வனப்பகுதி மற்றும் தண்டவாளத்தின் ஓரத்தில் தேங்குகிறது.
குன்னூர்- மேட்டுப்பாளையம் ரெயில் தண்டவாளத்தின் இருபுறங்களிலும் வனப்பகுதிகள் உள்ளன. இங்கு காட்டெருமைகள், யானைகள் போன்ற வனவிலங்குகள் அதிகம் வசிக்கின்றன. வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவுக்காக ரெயில் தண்டவாளம் அருகே வந்து செல்கின்றன.
இவ்வாறு வரும்போது ரெயில் பாதையின் ஓரத்தில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவு பொருட்களை யானைகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உண்ணும் நிலை ஏற்படுகிறது. இதனால் வனவிலங்குகளுக்கு உடல் நலம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி உயிரிழப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே ரெயில்வே நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை கண்காணித்து தடை விதிக்க வேண்டும். இதேநேரம் விழிப்புணர்வு ஏற்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story