இந்து ஆன்மிக கண்காட்சியையொட்டி மாணவர்களுக்கான நீச்சல் போட்டி சென்னையில் நடைபெற்றது


இந்து ஆன்மிக கண்காட்சியையொட்டி மாணவர்களுக்கான நீச்சல் போட்டி சென்னையில் நடைபெற்றது
x
தினத்தந்தி 22 Jan 2019 11:00 PM GMT (Updated: 22 Jan 2019 7:48 PM GMT)

சென்னை வேளச்சேரியில் உள்ள நீச்சல் குளத்தில், இந்து ஆன்மிக கண்காட்சியையொட்டி பண்பு சார்ந்த நீச்சல் போட்டிகள் நடைபெற்றன. இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

சென்னை,

இந்து ஆன்மிக மற்றும் சேவை மையமும், பண்பு மற்றும் கலாசார பயிற்சி முனைவு அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் 10-வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் நடைபெற உள்ளது. நாட்டுப்பற்றை வளர்த்தல் என்ற மையக்கருத்தை அடிப்படையாக கொண்டு நடத்தப்படும் இந்த கண்காட்சி வருகிற 30-ந் தேதி முதல் பிப்ரவரி 4-ந் தேதி வரை நடைபெறுகிறது. கண்காட்சியின் தொடக்க விழா 29-ந் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

கண்காட்சிக்கு லட்சக்கணக் கான மக்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு முன்னோட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, கடந்த 20-ந் தேதி முதல் முன்னோட்ட நிகழ்ச்சியாக விவேகானந்தர் ரத யாத்திரை தொடங்கியது. இதில் கலந்து கொண்ட 22 ரதங்கள் சென்னை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 10 நாட்கள் பயணம் மேற்கொண்டு 1000-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு சென்று இந்து ஆன்மிக கண்காட்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், 2-வது முன்னோட்ட நிகழ்ச்சியான ‘வருணா ஸ்விம்மத்தான்’ என்ற பெயரில் இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியில் முன் வைக்கப்பட்டுள்ள 6 பண்பு சார்ந்த நீச்சல் போட்டி நேற்று நடைபெற்றது. வேளச்சேரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நீச்சல் குளத்தில் நடைபெற்ற நீச்சல் போட்டிகளை மகரிஷி கல்விக் குழுமங்களின் முதல்வர் நமசிவாயம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்து ஆன்மிக மற்றும் சேவை அறக்கட்டளையின் துணைத்தலைவரும், பண்பு மற்றும் கலாசார பயிற்சி முனைவு அறக்கட்டளையின் அறங்காவலருமான ஆர்.ராஜலட்சுமி முன்னிலை வகித்தார்.

பண்பு சார்ந்த கருத்துகளை முன்வைத்து நடத்தப்பட்ட நீச்சல் போட்டிகளில், வனம் மற்றும் வன விலங்குகளை பாதுகாத்தல் என்ற பண்பை முன்வைத்து பாம்புவகை நீச்சலும், ஜீவராசிகளை பேணுதல் என்ற பண்பை முன்வைத்து சுதந்திர நீச்சலும், சுற்றுச்சூழலை பராமரித்தல் என்ற பண்பை முன்வைத்து நீரில் மிதத்தலும், பெற்றோர், பெரியோர் மற்றும் ஆசிரியர்களை வணங்குதல் என்ற பண்பை முன்வைத்து பக்கவாட்டு நீச்சலும், பெண்மையை போற்றுதல் என்ற பண்பை முன்வைத்து பட்டாம்பூச்சி நீச்சலும், நாட்டுப்பற்றை வளர்த்தல் என்ற பண்பை முன்வைத்து பின்புறமாக நீந்துதல் போட்டிகளும் நடத்தப்பட்டன.

நீச்சல் போட்டிகள் குறித்து ஆர்.ராஜலட்சுமி கூறும்போது, “நீச்சல் போட்டிகளில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்களும், நீச்சலில் தேர்ச்சி பெற்ற பொது மக்களும் கலந்து கொண்டனர். 10 வயது முதல் 40 வயது வரை உள்ள ஆண்களுக்கு 10 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பிப்ரவரி 3-ந் தேதி கண்காட்சி வளாகத்தில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன” என்றார்.

இந்து ஆன்மிக கண்காட்சிக்கான முன்னோட்ட நிகழ்ச்சிகள் வருகிற 28-ந் தேதி வரை நடைபெற உள்ளன. அதன்படி, இன்றைய (புதன்கிழமை) முன்னோட்ட நிகழ்ச்சியாக மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரி வளாகத்தில் 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கும் ‘ஸ்ரீ கிருஷ்ணா சம்ஸ்கார யோகா’ நிகழ்ச்சி மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை நடைபெறுகிறது. இந்த யோகா நிகழ்ச்சியிலும் ஆன்மிக கண்காட்சியில் இடம்பெறும் 6 பண்பு சார்ந்த கருத்துகளை வலியுறுத்தும் வகையில் மாணவர்கள் யோகாசனங்களை செய்ய உள்ளனர்.

Next Story