9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடங்கி உள்ளனர். இதன் ஒரு பகுதியாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தேனி,
தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (ஜாக்டோ-ஜியோ) சார்பில் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.
வேலைவாய்ப்பை குறைக்கும் அரசாணை எண் 56-ஐ ரத்து செய்ய வேண்டும். அங்கன்வாடி மையங்களில் தொடங்கப்படும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் இடைநிலை ஆசிரியர்களை பணி நியமனம் செய்வதை கைவிட வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறை அலுவலர்களும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன. கல்வித்துறையில் சுமார் 46 சதவீதம் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். இதனால் மாவட்டம் முழுவதும் பள்ளிகளில் வகுப்புகள் முழுமையாக நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டது. ஆசிரியர்கள் வராத காரணத்தால் 20-க்கும் மேற்பட்ட பள்ளிகள் அடைக்கப்பட்டன. கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் போராட்டத்தின் காரணமாக ஊழியர்கள் வேலைக்கு வரவில்லை. இதனால் அலுவலகம் வெறிச்சோடி கிடந்தது. இதனால் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர். கம்பம் மஞ்சக்குளம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை. அவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டதால் பள்ளி பூட்டுப்போடப்பட்டிருந்தது. இதனால் பள்ளிக்கு வந்த மாணவர்கள் ஏமாற்றுத்துடன் திரும்பிச் சென்றனர்.
ஆண்டிப்பட்டி அருகே உள்ள எஸ்.ரெங்கநாதபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 16 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு உதவி ஆசிரியர் பணியில் உள்ளனர். நேற்று அவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர். இதனால் பள்ளி திறக்கப்படவில்லை. மாணவர்கள் வழக்கம்போல் பள்ளிக்கு வந்து வாசலில் நீண்ட நேரம் காத்திருந்தனர். தகவலறிந்த சில பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களை அழைத்து சென்றனர். பள்ளி திறக்கப்படும் என்றும், மதியம் சத்துணவு வழங்கப்படும் என்று சில மாணவர்கள் காத்திருந்தது பரிதாபமாக இருந்தது.
கல்வித்துறையில் மொத்தம் 6 ஆயிரத்து 774 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 3 ஆயிரத்து 137 பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். வருவாய்த்துறையில் 484 ஊழியர்களில் 142 பேரும், ஊரக வளர்ச்சித்துறையில் 412 ஊழியர்களில் 162 பேரும், சுகாதாரத்துறையில் 586 ஊழியர்களில் 55 பேரும் வேலைநிறுத்தம் செய்தனர்.
கருவூலத்துறையில் 76 ஊழியர்களில் 28 பேரும், மாவட்ட நில அளவையர் பிரிவில் 93 ஊழியர்களில் 34 பேரும், சத்துணவு பணியாளர்களில் 1,666 பேரில் 637 பேரும், உணவு பாதுகாப்புத்துறையில் 11 அலுவலர்களில் 6 பேரும், வேளாண்மைத்துறையில் 142 பேரில் 6 பேரும், மற்ற துறைகளில் குறைந்த எண்ணிக்கையிலும் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலைநிறுத்தத்தை தொடர்ந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்காக நேற்று காலையில் கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர். அவர்கள் நுழைவு வாயில் வழியாக உள்ளே நுழைந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து நுழைவு வாயில் முன்பு திரண்டு நின்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முகமது அலி ஜின்னா தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பேசினர். சுமார் 2 மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால், அந்த வழியாக கலெக்டர் அலுவலகத்துக்கு வாகனங்கள் எதுவும் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது. ஆர்ப்பாட்டம் நடந்த பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போராட்டத்தின் 2-வது நாளாக இன்று (புதன்கிழமை) சாலை மறியலில் ஈடுபட உள்ளனர்.
Related Tags :
Next Story