பள்ளி மாணவியை கடத்தி பாலியல் தொந்தரவு செய்த தொழிலாளிக்கு 17 ஆண்டு சிறை உடந்தையாக இருந்த உறவினருக்கு 10 ஆண்டு தண்டனை


பள்ளி மாணவியை கடத்தி பாலியல் தொந்தரவு செய்த தொழிலாளிக்கு 17 ஆண்டு சிறை உடந்தையாக இருந்த உறவினருக்கு 10 ஆண்டு தண்டனை
x
தினத்தந்தி 23 Jan 2019 5:45 AM IST (Updated: 23 Jan 2019 11:55 AM IST)
t-max-icont-min-icon

முத்தூரில் பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு செய்த தொழிலாளிக்கு 17 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், அதற்கு உடந்தையாக இருந்த உறவினருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.

திருப்பூர்,

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வெடத்துக்குளத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(வயது 40). இவர் திருப்பூர் மாவட்டம் முத்தூர் அமராவதிபாளையத்தில் உள்ள ஒரு அட்டை பெட்டி தயாரிக்கும் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இதே நிறுவனத்தில் வடமாநில தொழிலாளி தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். அந்த தொழிலாளியின் வீட்டுக்கு அடிக்கடி பாலகிருஷ்ணன் சென்று வருவது வழக்கம்.

வடமாநில தொழிலாளியின் மகள் முத்தூரில் உள்ள ஒரு பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வந்தாள். இந்தநிலையில் கடந்த 3-2-2015 அன்று பாலகிருஷ்ணன் அந்த பள்ளிக்கு அருகே சென்று வடமாநில தொழிலாளியின் மகளை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார். பின்னர் உடுமலையில் உள்ள தனது உறவினரான சின்னமாரிமுத்து(38) தங்கியிருந்த அறைக்கு மாணவியை பாலகிருஷ்ணன் அழைத்துச்சென்றுள்ளார். அங்கு வைத்து அந்த சிறுமியை பாலகிருஷ்ணன் பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிகிறது.

இதுகுறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் காங்கேயம் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகிருஷ்ணன், சின்னமாரிமுத்து ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

சிறுமியை கடத்திச்சென்று பாலியல் தொந்தரவு செய்த குற்றத்துக்காக பாலகிருஷ்ணனுக்கு 17 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.20 ஆயிரம் அபராதம், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 3 ஆண்டு சிறை தண்டனையும், இதற்கு உடந்தையாக இருந்த சின்னமாரிமுத்துவுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 2 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் பரிமளா ஆஜராகி வாதாடினார்.


Next Story