திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் மார்ச் மாதத்துக்குள் கட்டி முடிக்கப்படும்
திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் வருகிற மார்ச் மாதத்துக்குள் கட்டி முடிக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
திருச்செந்தூர்,
பத்திரிகை, கல்வி, விளையாட்டு, ஆன்மிகம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூரில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தூத்துக்குடியில் கடந்த 22-11-2017 அன்று நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதன்படி திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினம் சிவந்தி அகாடமி வளாகத்தில் 60 சென்ட் நிலத்தில் ரூ.1 கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் முழுஉருவ சிலையுடன் மணிமண்டபம் அமைக்கப்படுகிறது.
இந்த மணிமண்டபத்தில் பூங்கா, நூலகம் மற்றும் மணிமண்டபத்துக்கு வருகின்ற பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதி நடந்தது. சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக்காட்சி மூலம் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் கட்டும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று மாலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் செயல்படும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 22-ந்தேதி தூத்துக்குடியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூரில் அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
படிக்காத பாமரர்களுக்கும் ‘தந்தி’ பத்திரிகை மூலம் தமிழ் கற்று கொடுத்து படிக்க வைத்தவர் ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார். அவரது வழியில் அவருடைய மைந்தர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் ‘தினத்தந்தி’ பத்திரிகையின் மூலம் தமிழக மக்களுக்கு பெரும் தொண்டாற்றினார். மேலும் அவர் கல்வி, விளையாட்டு, ஆன்மிகத்திலும் சிறந்து விளங்கினார்.
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் ஒலிம்பிக் சங்க தலைவராக திறம்பட பணியாற்றினார். அவர் எண்ணற்ற கோவில்களில் திருப்பணிகளை நடத்தினார். அவர் ஏழை எளிய மக்களுக்கு கொடை வள்ளலாக திகழ்ந்தார். அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில், அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படுகிறது.
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டியவுடன் மழைக்காலம் தொடங்கியது. திருச்செந்தூர் கடலோரத்தில் இருப்பதால் நிலத்தடி நீர் கசிவு இருந்தது. எனவே தற்போது பணிகள் தொடங்கப்பட்டு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இன்னும் 2 மாதங்களில் மணிமண்டப கட்டுமான பணிகள் நிறைவு பெறும். டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் வருகிற மார்ச் மாதத்துக்குள் கட்டி முடிக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
இந்த ஆய்வின்போது திருச்செந்தூர் உதவி கலெக்டர் கோவிந்தராசு, ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட் ராமராஜன், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், நெல்லை, தூத்துக்குடி ஆவின் தலைவர் என்.சின்னத்துரை, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கணேசன், வருவாய் ஆய்வாளர் மாரியம்மாள், கிராம நிர்வாக அலுவலர் செல்வலிங்கம், நகர கூட்டுறவு வங்கி தலைவர் கோட்டை மணிகண்டன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், நகர செயலாளர்கள் அரசகுரு (ஆறுமுகநேரி), மகேந்திரன் (திருச்செந்தூர்), மாவட்ட பொருளாளர் ஜெபமாலை, காந்தி தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் திருப்பதி, வக்கீல் ஜேசுராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story