நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி குறைந்த அளவு தண்ணீரில் விவசாயப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் அமைச்சர் பாஸ்கரன் வேண்டுகோள்
நவீன தொழில் நுட்பக்கருவிகளை பயன்படுத்தி குறைந்த அளவு தண்ணீரில் விவசாயப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்தார்.
சிவகங்கை,
மாவட்ட வேளாண்மைத்துறையின் சார்பில் வேளாண் பயிர் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. செந்தில்நாதன் எம்.பி. முன்னிலை வகித்தார். வேளாண்மை இணை இயக்குனர் சேகர் வரவேற்றார். இதில் அமைச்சர் பாஸ்கரன் கலந்து கொண்டு பேசியதாவது:–
தற்போது கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பயிர் காப்பீட்டை நம்பி உள்ளனர். குடிக்கக்கூட தண்ணீர் கிடைக்கவில்லை. கிணறு, ஆழ்துளை கிணறு ஆகியவைகளில் தண்ணீர் இல்லை. மாவட்டத்தில் உள்ள 13 லட்சம் ஆழ்குழாய் கிணறுகளில் 4 மணி நேரம் தான் தண்ணீர் கிடைக்கிறது. விவசாயத்திற்கு தேவையான பருவ மழை பெய்யாமல் பொய்த்து விடுகிறது. அதுமட்டுமன்றி வறட்சி ஏற்படும் நிலையில் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து விடுகிறது.
இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு விவசாயிகளுக்கு தேவையான நவீன தொழில்நுட்ப கருவிகள், உதவிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருகிறது. இதில் விவசாயிகள் தங்கள் பகுதிகளில் மண்வளம் மற்றும் நீர்வள ஆதாரங்களை கருத்தில் கொண்டு அதற்கேற்ப விவசாயப் பணிகளை திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
தற்போது மாவட்டத்திற்கு ரூ.200 கோடி பயிர் இழப்பீட்டு தொகை கிடைத்துள்ளது. அதில் ரூ.105 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு விட்டது. ஒருசில இடங்களில் பயிர் இழப்பீட்டு தொகை குறைந்த அளவில் நிர்ணயம் செய்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அதிகாரிகள் சென்னை சென்று, அதை சரி செய்தனர்.
தமிழகத்தில் விவசாய உற்பத்தியில் சிவகங்கை மாவட்டம் 3–வது இடத்தில் உள்ளதாக கூறுகின்றனர். ஆனால் தண்ணீர் இன்றி நாம் தொடர்ந்து விவசாயம் செய்ய முடியாது. அதனால் குறைந்த தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் செய்யம் தொழில் நுட்பங்களை தற்போது வேளாண்மைத்துறையினர் அறிமுகப்படுத்தியுள்ளனர். அவைகளை விவசாயிகள் சரிவர பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் மானியத் திட்டத்தில் ரூ.12.55 லட்சம் மதிப்பில் வேளாண் உபகரணங்களை அமைச்சர் வழங்கினார். இதில் வேளாண் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள் செந்தூர்குமரன், கண்ணன், பரமசிவம், துணை இயக்குனர்கள் ராஜேந்திரன், சசிகலா, இளங்கோவன், வேளாண்மை அலுவலர் பரமேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.