பெண்களுக்கு மானிய இருசக்கர வாகனம்; 31–ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
பெண்களுக்கு மானிய உதவியுடன் இருசக்கரவாகனம் வழங்கும் திட்டத்திற்கு வருகிற 31–ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை,
கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்தள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:– தமிழகத்தை சேர்ந்த பெண்கள், பணியிடங்களுக்கும், பிற இடங்களுக்கும் எளிதில் சென்று வர ஏதுவாக இருசக்கர வாகனம் வாங்க 50 சதவீத மானியம் வழங்கும் திட்டத்தை அம்மா இருசக்கர வாகனம் என்ற பெயரில் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
இதில் 50 சதவீத மானியம் அல்லது ரூ.25ஆயிரம் இவற்றில் எது குறைவோஅது வழங்கப்படும். இதற்கு 8–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றும், 18 வயதிற்கும் மேல் 40 வயதுக்கும் உட்பட்ட பெண்கள் இந்த திட்டத்திற்காக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் செய்யும் போது இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருத்தல் வேண்டும். வருடாந்திர வருமானம் ரூ.2 லட்சத்தி 50 ஆயிரத்திற்குள் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளி பெண்களுக்கு (3 சக்கர வாகனத்திற்கு) ரூ.31 ஆயிரத்து 250 மானியமாக வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் மானியம் பெற தகுதியான விண்ணப்பதாரர்கள் ஊரகப் பகுதிகளை சேர்ந்த பெண்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், நகர்புறத்தில் உள்ள பெண்கள் நகராட், பேரூராட்சி அலுவலங்களிலும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டத்திற்காக விண்ணப்பங்களை வருகிற 31–ந்தேதி மாலை 5 மணி வரை கொடுக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.