எம்.ஜி.ஆர். போல் இனி எந்த நடிகரும் அரசியலில் வெற்றி பெற முடியாது முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு


எம்.ஜி.ஆர். போல் இனி எந்த நடிகரும் அரசியலில் வெற்றி பெற முடியாது முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு
x
தினத்தந்தி 22 Jan 2019 11:30 PM GMT (Updated: 22 Jan 2019 9:51 PM GMT)

எம்.ஜி.ஆர். போல் இனி எந்த நடிகரும் அரசியலில் வெற்றி பெற முடியாது என முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.

பரமக்குடி,

பரமக்குடி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் பொதுக்கூட்டம் பரமக்குடி காந்தி சிலை முன்பு நடந்தது. மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமை தாங்கினார். நகர் செயலாளர் கணேசன், ஒன்றிய செயலாளர்கள் நாகநாதன், காளிமுத்து, முத்தையா, குப்புச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

எம்.ஜி.ஆர். மன்ற நகர் செயலாளர் உதுமான் அலி வரவேற்றார். மாநில மகளிரணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி, முன்னாள் அமைச்சர் டாக்டர் சுந்தரராஜ், மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி துணை செயலாளர் சதன் பிரபாகரன், தலைமை கழக பேச்சாளர்கள் தாஜ்குமாரி, பண்ணை கருப்பையா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது:– அ.தி.மு.க. ஜனநாயக கட்சி. தி.மு.க. குடும்ப கட்சி. அ.தி.மு.க.வில் யார் வேண்டுமானாலும் எம்.பி.யாகவோ, மந்திரியாகவோ ஆகலாம். ஆனால் தி.மு.க.வில் அவர்களின் வாரிசுகள் தான் பதவிக்கு வரமுடியும். அ.தி.மு.க.வை ஒருபோதும் தி.மு.க. தனித்து நின்று வீழ்த்த முடியாது. டி.டி.வி.தினகரன் இனிவரும் தேர்தல்களில் டெபாசிட் இழப்பார். ஒரு எம்.எல்.ஏ.வாக இருந்து அவர் எப்படி முதல்வராவார்? அவரை நம்பி பின்னால் சென்ற 18 எம்.எல்.ஏ.க்களுக்கு பதவியும் போச்சு. பென்சனும் போச்சு.

எம்.ஜி.ஆர். போல் இனி எந்த நடிகரும் அரசியலில் வெற்றி பெற முடியாது. நடிகர் கமலஹாசன் வரும் தேர்தலுடன் காணாமல் போய் விடுவார். ரஜினிகாந்த் கட்சி தொடங்கவே மாட்டார். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் பாதுஷா, முன்னாள் மாவட்ட செயலாளர்கள் சோமாத்தூர் சுப்பிரமணியன், ஆணிமுத்து, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் வின்சென்ட் ராஜா, மாவட்ட மாணவரணி செயலாளர் செந்தில்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணக்குமார், துணை செயலாளர் வினோத்குமார், ராமநாதபுரம் நகர் செயலாளர் அங்குச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் தங்கவேல், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாலசுப்பிரமணியன், சிறுபான்மை பிரிவு பொருளாளர் அப்துல் மாலிக், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராமு யாதவ், இளைஞர் பாசறை துணை செயலாளர் இந்திரஜித் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர் ஜெயலலிதா பேரவை செயலாளர் வடமலையான் நன்றி கூறினார்.


Next Story