குப்பை கிடங்கில் ரசாயன புகை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற கிராம மக்கள் முகநூலில் தகவல் பரவியதால் பரபரப்பு


குப்பை கிடங்கில் ரசாயன புகை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற கிராம மக்கள் முகநூலில் தகவல் பரவியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 22 Jan 2019 11:15 PM GMT (Updated: 22 Jan 2019 9:51 PM GMT)

கீழக்கரை குப்பை கிடங்கில் ரசாயன புகை என்று முகநூலில் தகவல் பரவியதால், நகராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட முயன்றனர்.

கீழக்கரை,

கீழக்கரை நகராட்சிக்கு சொந்தமான குப்பைகளை உரமாக்கும் கிடங்கு ராமநாதபுரம்–கீழக்கரை சாலையில் அமைந்துள்ளது. இங்கு கீழக்கரை நகராட்சியில் சேரும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கிடங்கில் குப்பைகள் எரிக்கப்படுவதாகவும், இதனால் ஏற்படும் புகையால் அந்த பகுதி அருகே இருக்கும் கிராம மக்கள் பாதிக்கப்படுவதாகவும் மேலும் ரசாயன புகை வருகிறது என்றும் முகநூலில் தகவல் வெளியானது.

அதைத்தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த சிலர் குப்பை கிடங்கால் பாதிப்பு இருக்கிறது என்றும், அதை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியபடி கீழக்கரை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றனர். தகவலறிந்த போலீசார் முற்றுகை போராட்டத்திற்கு அனுமதியளிக்கவில்லை.

இதனையடுத்து நகராட்சி அலுவலகம் முன்பு மேலும் ஏராளமானவர்கள் குவிந்தனர். அவர்களிடம் கீழக்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு முருகேசன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் தனலட்சுமியிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது, நகராட்சியின் உரக்கிடங்கில் குப்பைகள் உரிய வகையில் பராமரிக்கப்படுகிறது. ஆனால் சமூக விரோதிகள் வேண்டுமென்றே தீ வைத்து, அதை ஒரு நபர் வீடியோவாக எடுத்து முகநூலில் பதிவிட்டு ரசாயன புகை என்ற வதந்தியை கிளப்பியுள்ளார். இதனால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

முகநூலில் வதந்தி குறித்து சில தினங்களுக்கு முன்பு போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே விரைவில் போலீசார் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றார்.


Next Story